தமிழ்நாடு

யானைக்கும் உண்டு குடும்பம்: சின்னதம்பியை தேடி அலையும் யானைகள்!

யானைக்கும் உண்டு குடும்பம்: சின்னதம்பியை தேடி அலையும் யானைகள்!

webteam

கோவையில் பிடிக்கப்பட்ட யானை சின்னதம்பியைத் தேடி, பெண் யானையும் அதன் குட்டியும் வலம் வந்தபடி இருக்கின்றன.

சின்னதம்பி என்ற யானை கோவை மாவட்டம் ஆனைக்கட்டி சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு வெகு பரிச்சயம். சின்னதம்பியையும், அதன் கூட்டாளியான விநாயகனையும் அவற்றின் வாழ்விடத்திலிருந்து வெளியேற்றக்கூடாது என பழங்குடியின மக்களும், உள்ளூர் இளைஞர்களும் கோரிக்கை விடுத்தும், விவசாயிகள் நலனுக்காக அவற்றை புதிய இடத்திற்கு வனத்துறையினர் பிடித்துச்சென்றனர்.

விநாயகன் எளிதில் பிடிபட, சின்னதம்பியோ பெண் யானை மற்றும் குட்டியுடன் வலம் வந்தது. சின்னதம்பியை வனத்துறையினர் நெருங்கும் போது, குட்டியை பிடிக்‌க வருவதாக நினைத்து 2 யானைகளும் ஆக்ரோஷமாகியதாக வனத்துறையினர் கூறுகின்றனர். அதனால், அந்த பெண் யானையும், குட்டியும் சின்னதம்பியின் குடும்பமாக இருக்கலாம் என்றும் கருதப்பட்டது. இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி நீண்ட போராட்டத்திற்கு பிறகு சின்னதம்பியை வனத்துறையினர் பிரித்து பிடித்துச்சென்றனர்.

தன் கூட்டத்தை பிரிந்து, தந்தம் உடைந்து, ரத்த காயங்களோடு சின்னதம்பியை வனத்துறையினர் பிடித்துச்சென்றது காண்போரை கலங்கச்செய்தது.

இந்நிலையில், சின்னதம்பியை தேடும் வகையில் பெண் யானையும், அதன் குட்டியும் சுற்றி வருவதாக வனத்துறையினர் கூறுகின்றனர். சின்னதம்பி வழக்கமாக சுற்றிவரும் இடங்களுக்கெல்லாம் இரு யானைகளும் சென்று வருவது காண்போரை கலங்க செய்கிறது. சின்னதம்பியை பிரிந்ததால் மிகுந்த ஆக்ரோஷத்துடன் கணுவாய், வரப்பாளையம், பன்னீமடை போன்ற பகுதிகளில் இரு யானைகளும் சுற்றி வருகின்றன. அதனை பார்க்கும் அந்த பகுதி மக்கள் யானை என்றாலும் அதற்கும் குடும்பம் உண்டுதானே என கேள்வி எழுப்புகின்றனர்