தங்கள் கிராமத்திற்கு வந்த நிவாரணப் பொருட்களை, அடுத்த கிராமத்திற்கும் அனுப்பி வைத்து மனிதாபிமானத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கியுள்ளனர் நாகை மாவட்ட மீனவர்கள்
கஜா புயலானது தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை புரட்டி போட்டுள்ளது. அரசு ஒரு புறம் தீவிரமாக செயல்பட்டு நிவாரண உதவிகளை செய்து வருகிறது. பிற அரசியல் கட்சிகள், அமைப்புகள், தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்களை நேரில் வழங்கி வருகின்றனர். இருப்பினும், ஒரு வாரம் ஆகியும் சில இடங்களில் அடிப்படை தேவைகளுக்காக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கஜா புயலால் தலைகீழாக புரட்டிப் போடப்பட்டிருக்கும் நாகை மாவட்ட மீனவப் பகுதிகளில் ஒன்று நம்பியார் நகர். நாகை நகரை ஒட்டி அமைந்திருக்கும் இவ்விடத்தில் விசைப்படகுகள், ஃபைபர் படகுகள் என கணக்கிடலங்கா மீன்பிடிப்படகுகளை ஊதித்தள்ளிவிட்டது புயல். இவற்றில் பெரும்பாலான படகுகளை சரி செய்யவே முடியாது என்பதால், மீனவர்கள் வேதனைக்கடலில் ஆழ்ந்துள்ளனர்.
உண்ண உணவும், உடுத்த உடையும் இன்றி கைவிடப்பட்ட நிலையில் இருந்த நம்பியார் நகர் மீனவர்களுக்கு உதவிட கேரள மக்கள் முன்வந்தனர். கேரளாவில் இருந்து நிவாரணப்பொருட்கள் நம்பியார் நகருக்கு வந்துசேர்ந்தன. தாங்கள் புயலால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தங்களைவிடவும் அதிகம் பாதித்த மீனவ கிராமங்கள் இருப்பதாகக்கூறிய நம்பியார் நகர் மீனவர்கள்,
கேரளாவில் இருந்து வந்த நிவாரணபொருட்களை மற்ற கிராமங்களுக்கும் கொடுத்து உதவி செய்துள்ளனர்.
தங்களுக்கு கிடைத்ததை பிறருக்குக் கொடுத்து மனதளவில் பசியாறிக் கொண்டுள்ளனர் நம்பியார் நகர் மீனவ மக்கள். புயலால் ஒரு வேளை உணவுக்கே திண்டாடும் சூழலில், அடுத்தவருக்கு கொடுத்து, தங்களைப் போன்றவர்கள்தான் மேன்மக்கள் என உலகுக்கு உணர்த்தியுள்ளனர் நம்பியார் நகர் மீனவர்கள். இருப்போர் கொடுத்தால் அது உதவி, இல்லாதோர் கொடுத்தால் அது பேருதவி என்பதற்கு இதுவே தக்க சான்று.