நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைப்பதை தடுக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த தீர்ப்பாயம், சிலைகளை கரைப்பதால் நீர் நிலைகள் மாசடைவது மட்டுமல்லாமல், சிலைகளின் கரையாத பாகங்கள் எடுக்கப்படுவதாகவும், அவற்றை சுத்தப்படுத்த வேண்டிய சுமை அரசுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படுவதாகவும் தெரிவித்தது.
நீதிபதி புஷ்பசத்யநாராயணா மற்றும் நிபுணர் உறுப்பினர் சத்யகோபால் கோர்லபதி ஆகியோர் அடங்கிய அமர்வு கொடுத்த உத்தரவில், “விநாயகர் சதுர்த்தி விழாவின்போது வழிபடப்படும் சிலைகளை பொறுப்புடன் கரைக்க வேண்டியதன் அவசியம் குறித்து மாவட்ட அளவிலான அதிகாரிகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்த வேண்டும்.
சிலைகளைக் கரைக்க அனுமதி வழங்கப்படும்போது அதிகாரிகள் கட்டணம் வாங்காமல் இருப்பதும் கவனிக்கப்படுகிறது. இதன் காரணமாக சுத்தம் செய்யும் சுமை அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மீது முழுவதுமாக விழுகிறது. விநாயகர் சதுர்த்தியின்போது சிலைகள் கரைப்பதற்கு அனுமதி வழங்க கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். இதன்மூலம் சேகரிக்கப்படும் தொகையை சம்பந்தப்பட்ட நீர்நிலைகளின் பராமரிப்புக்கு பயனுள்ளதாக செலவிடலாம்” என தெரிவித்துள்ளனர்.
அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலை கரைக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில், அதிகாரிகள் இருப்பதாகவும் தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியது. அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளை கரைத்தால் விதிக்கப்படும் அபராதம் குறித்து விளம்பரப்படுத்தவும் உத்தரவிட்ட தீர்ப்பாயம், வழக்கை முடித்து வைத்தது.