டொனால்ட் டிரம்ப்பின் சீன எதிர்ப்பு கொள்கை, பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் கொண்டுள்ள நட்பு, பைடன் காலத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள வரியில்லாத வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை உயிர்ப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் திருப்பூர் பின்னலாடைத் துறைக்கும் சாதகமானதாக அமையும் என்ற எதிர்பார்ப்பு தொழில்துறையினரிடம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் அமெரிக்கர்கள், அமெரிக்க உள் நாட்டு உற்பத்தி என டிரம்ப் அமெரிக்க வளர்ச்சியில் நாட்டம் கொண்டவர் என்றாலும் அவரது சீன எதிர்ப்பு கொள்கை இந்தியாவுக்கு சாதமாகும் என்கிறார் ஸ்டார்ட் அப் இந்தியா அமைப்பை சேர்ந்த ஜெயபிரகாஷ்.
அவர் கூறுகையில், “தடைகள் என்பது சீனாவிற்குத்தான் அதிகமாக இருக்கும். எனவே, உற்பத்தி நாடுகளில் இந்தியாதான் அடுத்த இடத்தில் உள்ளது. வங்கதேசம் போன்ற நாடுகளில் இந்தியா போன்ற உள்கட்டமைப்போ, இந்தியா போன்ற தொழிலாளர் நலனோ இல்லை. மொத்தமாக திருப்பூரில் ஏறத்தாழ 48 ஆயிரம் கோடி வர்த்தகம் நடக்கிறதென்றால், அதில் 8 முதல் 10% அமெரிக்காவின் பங்கு இருக்கிறது. நாளை இன்னும் அமெரிக்காவில் இருந்து வாங்குவதற்கு வருபவர்களது எண்ணிக்கை அதிகமாகும் என்பது கணிப்பு” என தெரிவித்தார்.
ஜோ பைடன் ஆட்சி காலத்தில் கிடப்பில் போடப்பட்ட அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை, டிரம்ப்பின் வருகையால் நிறைவேற வாய்ப்பு உள்ளது. இதனால், அமெரிக்காவுக்கான இந்திய பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது. டிரம்ப் மீண்டும் அரியணை ஏறுவதால் சாதக, பாதகங்கள் இருந்தாலும், அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் இந்தியாவுக்கு பாதகமான அம்சங்கள் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா - அமெரிக்கா இடையிலான ஏற்றுமதி வர்த்தகம், ஸ்திரத்தன்மையோடு சிறப்பாகவே உள்ளது என்றும் இந்திய நாட்டு ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 8 முதல் 10 சதவீதம் வரை உள்ளது எனவும் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
டிரம்ப்பை பொறுத்தவரை போரை நிறுத்துவேன் என உறுதியளித்துள்ளதால் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை பெறும்சூழல் உருவாகக்கூடும் என்றும், ஐரோப்பாவுக்கான இந்திய ஏற்றுமதி வர்த்தகம் எழுச்சி பெறும் இதன் மூலம் திருப்பூர் பின்னலாடை துறைக்கும் சாதகமான வளர்ச்சி இருக்கும் என்கிறார் ஜெயபிரகாஷ். ஜனவரி 20 ல் ட்ரம்ப் அதிபர் பதவி ஏற்றபிறகு என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.