கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள ஆர்.சி.கோவிலங்குப்பம் கிராமத்தில் ஊர்க்கட்டுப்பாடு என்ற பெயரில், பெண் ஒருவரின் திருமணத்திற்கு அனுமதி வழங்க பங்குத் தந்தை மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.சி.கோவிலங்குப்பத்தைச் சேர்ந்த தனராஜ் என்பவருக்கு கடந்த ஜூலை 14-ஆம் தேதி பஞ்சாயத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. என்ன காரணத்திற்காக தன்னை பஞ்சாயத்திற்கு அழைத்துள்ளார்கள் என்பதை தெரிவிக்காததால், தனராஜ் கூட்டத்திற்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரது மகளுக்கு திருமண ஏற்பாடு நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்கு முதல் நாள், பங்குத் தந்தை அனுமதி கடிதம் வழங்காததால் தன்ராஜ் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடத்த முடியாது எனக் கூறியதற்கு என்ன காரணம் என பங்குத் தந்தையிடம் கேட்டபோது, அவர் அளித்த பதிலால் தன்ராஜ் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். ஊர் பஞ்சாயத்து கூடி தன்ராஜ் குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளதாகவும், கிறிஸ்தவ முறைப்படி நடைபெறும் எந்தச் சடங்குகளையும் அவர்களுக்கு ஊர் திருச்சபை செய்து வைக்கக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் பங்குத் தந்தை மைக்கேல் துரைராஜ் கூறியுள்ளார்.
மணமகளின் கிராம தேவாலயத்தில் இருந்து திருமணத்திற்கு அனுமதி கடிதம் வழங்கப்படாததால், மணமகன் தரப்பு பங்குத்தந்தையும் திருமணத்தை நடத்தி வைக்க மறுப்பு தெரிவித்துள்ளார். அதனால், திருமணம் நிற்கும் அளவிற்கு சென்று விட்டதாக ஆதங்கப்படுகின்றனர் மணமகள் வீட்டார். மணமகன் சவரிமுத்துவின் குடும்பத்தை சமாதானப்படுத்தி எவ்வித சடங்குகளுமின்றி, தங்கள் மகளை திருமணம் செய்து அனுப்பி வைத்துள்ளனர் தன்ராஜ் குடும்பத்தினர். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அவர்கள், ஊர் மக்கள் நிறைவேற்றியதாக கூறப்படும் தீர்மான நகலோடு உப்பளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.