இறைச்சிக்காக மாடுகளை கால்நடை சந்தைகளில் வாங்கவோ, விற்கவோ கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளதால் சந்தைகளுக்கு மாடுகளின் வரத்து குறைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
போச்சம்பள்ளி வாரச்சந்தை இன்று காலை கூடியது. சுமார் 500 மாடுகளுக்கு மேல் விற்கப்படவேண்டிய நிலையில் இன்று 50-கும் குறைவான மாடுகளே விற்பனைக்கு வந்தன. இந்த மாடுகளை வாங்க வியாபாரிகள் யாரும் வராததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து கம்பைநல்லூரிலிருந்து மாடு விற்க வந்த விவசாயி ஒருவர் கூறும்போது, மகனின் படிப்பு செலவிற்காக மாடு விறக வந்தேன். சுமார் ரூ. 15 ஆயிரத்துக்கு விற்க வேண்டிய மாட்டை உள்ளூர் வியாபாரிகள் ரூ. 6 ஆயிரத்துக்கு கேட்டதால் விற்காமல் திரும்ப அழைத்து செல்கிறேன் என தெரிவித்தார்.
மேலும் வாரச் சந்தைக்கு அதிக அளவு கன்று குட்டிகள் விற்பனைக்கு வந்தன. இவை இறைச்சிக்காக மட்டுமே வாங்கி செல்லப்படுபவை. இதை வாங்க வெளியூர் வியாபாரிகள் யாரும் வராததால் கன்றுகுட்டிகளை திரும்ப அழைத்து சென்றனர். சுமார் 1000 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய கன்றுகுட்டுகளை உள்ளூர் வியாபாரிகள் ரூ.200க்கு கேட்டதால் திரும்ப அழைத்து சென்றனர். இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, மத்திய அரசு உத்தரவை பரிசீலிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.