தமிழகத்தில் பல இடங்களில் பெய்த கனமழை pt web
தமிழ்நாடு

தமிழ்நாடு முழுக்க வெளுத்து வாங்கிய மழை.. சில இடங்களில் வெள்ளம்.. பல இடங்களில் விவசாயிகள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் தேனி, தென்காசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்தது. வாணியம்பாடியில் வெளுத்து வாங்கிய மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்தது.

PT WEB

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலையில் தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்தது. கனமழை காரணமாக, கிரிசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்தது.

தேனி மாவட்டம் போடி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் மானாவாரி விவசாயத்தில், விதைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால், காவல்நிலையம் முன்பு தண்ணீர் தேங்கியது.

தென்காசி மாவட்டம் சிவகிரி, புளியங்குடி, வாசுதேவநல்லூரில் இரண்டாவது நாளாக வெளுத்து வாங்கிய மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம் பகுதியில் மாலை நேரத்தில் பெய்த கனமழையால், வீடுகளுக்கு திரும்பிய மாணவ, மாணவிகள் நனைந்தபடி சென்றனர்.

இதனிடையே சீர்காழி அருகே அகர எலத்தூர் கிராமத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த சாந்தி என்பவர் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.