தமிழ்நாடு

ஊருக்குள் கொட்டப்படும் சாயக்கழிவுகள் : லாரிகளை மடக்கிப்பிடித்த விவசாயிகள்

ஊருக்குள் கொட்டப்படும் சாயக்கழிவுகள் : லாரிகளை மடக்கிப்பிடித்த விவசாயிகள்

webteam

ஈரோட்டில் இருந்து லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு கரூரில் கொட்டப்பட்ட சாயக்கழிவுகள் திருப்பி சாயப்பட்டறைக்கே அனுப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து சட்ட விரோதமாக சாயக்கழிவுகளை ஆற்றில் கலந்து விடுவதால் நொய்யல் ஆற்றுத் தண்ணீர் நச்சுத்தன்மையுடன் கரூர் மாவட்டத்தில் கலப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்தச் சாயக்கழிவுநீரால் கரூர் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் நச்சுத்தன்மை ஏற்பட்டு நிலம் மலட்டுத்தன்மை அடைந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் ஆடு, மாடுகளுக்கு தண்ணீர்கூட கிடைப்பது இல்லை எனக் கூறுகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ஒரு சாயப்பட்டறையில் இருந்து நச்சுத்தன்மை கொண்ட சாய திடக்கழிவுகளை 2 லாரிகள் மூலம் ஏற்றிக்கொண்டு வந்து கரூர் மாவட்டத்தின் கூனம்பட்டி, கொள்ளுக் காடு, துக்காச்சி போன்ற இடங்களில் கொட்டியுள்ளனர். அப்போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் லாரி ஓட்டுநர்களான செந்தில், ராஜமாணிக்கம் ஆகியோரையும், லாரிகளையும் சிறை பிடித்தனர். பின்னர் தென்னிலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ஒரு தனியார் சாயப்பட்டறையில் இருந்து திடக்கழிவுகளை இடைத்தரகர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் கொக்கிராஜா ஆகியோர் மூலம் லாரியில் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கொட்டப்பட்ட நச்சு சாயக்கழிவுகளை அதே லாரியில் ஏற்றிக்கொண்டு சம்பந்தப்பட்ட சாயப்பட்டறைக்கே திருப்பி அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து இனிமேல் இவ்வாறு நடைபெறாமல் தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.