தமிழ்நாடு

பெரம்பலூர்: அரசு நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

பெரம்பலூர்: அரசு நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

Sinekadhara

பெரம்பலூர் அருகே விவசாயிகள் அரசு நெல்கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்களை காக்கவைத்து விட்டு வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பெரம்பலூர் அருகே பூலாம்பாடியில் அரசு நெல்கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனை நம்பி பூலாம்பாடி, கடம்பூர், கள்ளபட்டி, பெரியம்மாபாளையம், வெங்கலம், உடும்பியம் உட்பட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களைச்சேர்ந்த விவசாயிகள் உள்ளனர். இங்கு டோக்கன் முறையில் நாளொன்றுக்கு 600 சிப்பம் மூட்டை கணக்கில் 300 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக விவசாயிகளை புறக்கணித்து விட்டு வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அது தொடர்பாக விவசாயிகள் புகார் தெரிவித்ததையடுத்து வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது என நெல்கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கு அவர்களது உயரதிகாரிகள் அறிவுறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது. இருந்தபோதும் அதனையும் மீறி தொடர்ந்து வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கே முன்னுரிமை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் விவசாயிகள் நெல்லை விற்பதற்கு குறைந்தபட்சம் 25 நாட்கள் வரை காத்திருக்கும் சூழல் நிலவுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் நெல்கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்ததற்கான ஆதாரங்களுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகளின் பெயரை அடித்து திருத்தியும் வேறுபெயர்களில் பதிவு செய்தும் முறைகேடு நடந்துள்ளதை விவசாயிகள் சுட்டிக்காட்டி முறையிட்டனர். 3 மணிநேரத்திற்கும் மேலாக விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருவதால் பூலாம்பாடி நெல்கொள்முதல் நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது.