தமிழ்நாடு

“புகார் கொடுக்க சென்றால் போலீசார் மிரட்டுகின்றனர்” - ஆட்சியரிடம் முறையிட்ட விவசாயிகள்

“புகார் கொடுக்க சென்றால் போலீசார் மிரட்டுகின்றனர்” - ஆட்சியரிடம் முறையிட்ட விவசாயிகள்

webteam

எரிவாயு குழாய் நிறுவனத்துக்கு ஆதரவாக விவசாயிகளை மிரட்டிய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள குலையன்கரிசல், பொட்டல்காடு பகுதியை உள்ளடக்கிய சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விவசாய விளை நிலங்களின் வழியே நடைபெறும் இந்த பணிக்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி அனுமதியின்றி எரிவாயு குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட எண்ணெய் நிறுவனத்தினர் குறித்து விவசாயிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், விவசாயிகளை காவல்துறையினர் மிரட்டியதாக தெரிகிறது.

இது குறித்து குலையன்கரிசல் சேர்ந்த விவசாயிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மேலும் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், “குலையன்கரிசல் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 10-ம் தேதியன்று இந்தியன் ஆயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அனுமதியின்றி வாழை பயிர் தோட்டத்தின் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து புதுக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது எங்களை கைதிபோல அமர வைத்து போலீசார் மிரட்டினர்.

போலீசாரின் இந்த நடத்தை கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து விளக்கினோம். ஆனால் அவரும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து எங்களை மிரட்டினார். காவல்துறை பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை விட்டுவிட்டு, ஏவல் துறையாக செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஏற்கனவே எரிவாயு குழாய் பதிக்கும் பணி தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனத்தினர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்டதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் இருக்கும்போது மீண்டும் அது மாதிரியான போக்கை கடைபிடித்து வருகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.