தமிழ்நாடு

அரசின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்து விவசாயி பலி

webteam

அரியலூர் அருகே அரசின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் விவசாய கூலி தொழிலாளி உயிரிழந்தார். 

அரியலூரின் திருமழப்பாடி அருகே உள்ள விளாகம் கிராமத்தில் அரசு கட்டித்தந்த தொகுப்பு வீடுகளில் ஒன்றில் விவசாய கூலித்தொழிலாளி ஜெயசீலன் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த ஒருவாரமாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், ஜெயசீலனின் வீட்டுச்சுவர் சேதமடைந்திருந்தது. இதனால், மனைவி, மகள் மற்றும் மகனை பக்கத்து வீட்டில் படுக்கச்சொன்ன ஜெயசீலன், தான் மட்டும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஜெயசீலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ‌பலத்த சத்தம் கேட்டதையடுத்து அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது வீடு தரைமட்டமாகியிருந்தது.. இதுகுறித்து வெங்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடிந்து விழுந்த தொகுப்பு வீடு 1989ஆம் ஆண்டு வீடற்ற மக்களுக்காக அரசால் கட்டித்தரப்பட்டது.