தமிழ்நாடு

லால்குடி: பண்ணை தோட்டத் தொழிலாளி ரத்தக்காயங்களுடன் உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டம்

லால்குடி: பண்ணை தோட்டத் தொழிலாளி ரத்தக்காயங்களுடன் உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டம்

Sinekadhara

பண்ணை தோட்டத் தொழிலாளி ரத்தக்காயங்களுடன் உயிரிழந்த சம்பவத்தில் தோட்ட உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தக்கோரி உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெரியகுருக்கை கிராமத்தில் சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் பண்ணைத் தோட்டம் உள்ளது. இந்த பண்ணைத் தோட்டத்தினை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் மகன் செந்தில்(40)  என்பவர் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வைத்து பண்ணை தோட்டத்தை நிர்வகித்து வருகிறார்.

இந்த தோட்டத்தில் லால்குடி அருகேயுள்ள விடுதலை புரம் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மகன் முருகேசன் என்பவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தோட்டத் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்துள்ளார். இவருக்கு தினசரி ரூபாய் 150 வீதம் கூலியாக கொடுக்கப்பட்டு வந்துள்ளது. முருகேசனின் செல்போனுக்கு அவரது மனைவி சகுந்தலா தொடர்பு கொண்ட போதெல்லாம் அவரது கணவர் முருகேசன் பேசாமல் தோட்டத்தின் உரிமையாளர் செந்தில் எடுத்துப்பேசி, தோட்டத்தில் வேலை செய்துகொண்டுள்ளார் எனக் கூறி வந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த முருகேசனின் மனைவி சகுந்தலா மற்றும் அவரது குழந்தைகள் பண்ணைத் தோட்டத்திற்கு கடந்த 20ஆம் தேதி சென்று பார்த்தபோது அப்போதும் தோட்டத்தின் உரிமையாளர் செந்தில், உங்களது கணவர் தோட்ட வேலைக்கு சென்றுள்ளார்; இப்போது பார்க்கமுடியாது என திருப்பி அனுப்பி உள்ளார்.

இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி தோட்டத்து உரிமையாளர் செந்தில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் தோட்டத் தொழிலாளி முருகேசனை உடலில் ரத்தக் காயங்களுடன் உடல் மிகவும் மெலிந்த நிலையில் அவரது வீட்டில் வந்து விட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் விட்டுச்சென்ற சில நிமிடங்களிலேயே முருகேசன் உயிரிழந்தார்.

இதுகுறித்து முருகேசனின் மனைவி சகுந்தலா கல்லக்குடி காவல் நிலையத்திற்கு புகார் அளித்ததின் பேரில் போலீசார் முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கல்லக்குடி போலீசாரின் விசாரணையும், நடவடிக்கையும் திருப்திகரமாக இல்லாததால் கடந்த 23 ஆம் தேதியில் இருந்து 27 ஆம் தேதி தேதி வரை உடலை வாங்க மறுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உயிரிழந்த முருகேசனின் மனைவி மற்றும் அவரது மூன்று குழந்தைகள் அவரது உறவினர்கள் பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த முருகேசனின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும், தோட்டத்தின் உரிமையாளர் செந்தில் மீது கொலைவழக்கு பதிய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லால்குடி அரசு மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது கல்லக்குடி போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்பு தற்கொலை வழக்கு கொலைவழக்காக மாற்றப்படும் என உறுதியளித்த பிறகு கண்டன ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். இதனையடுத்து உயிரிழந்த முருகேசனின் பிரேத பரிசோதனை நடைபெற்று உடலை அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.