தமிழ்நாடு

அரசியலுக்கு ரஜினி வரவேண்டி சென்னையில் இன்று ரசிகர்கள் அறப்போராட்டம்: காவல்துறை அனுமதி

அரசியலுக்கு ரஜினி வரவேண்டி சென்னையில் இன்று ரசிகர்கள் அறப்போராட்டம்: காவல்துறை அனுமதி

Veeramani

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டி சென்னையில் போராட்டம் நடத்த, ரசிகர்கள் கோரியதன் அடிப்படையில் காவல் துறை அனுமதியளித்துள்ளது.

 அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த், பின்னர் உடல்நிலை காரணமாக அந்த முடிவை கைவிட்டார். ஆனால், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும் என வலியுறுத்தி, சென்னை - வள்ளுவர் கோட்டம் அருகே அறப் போராட்டத்தில் ஈடுபடுவதென அவரது ரசிகர்கள் முடிவெடுத்துள்ளனர். ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர், ரஜினி மக்கள் மன்ற மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர், தென் சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணை செயலாளர் ராமதாஸ் தலைமையில்  போராட்டம் நடைபெற உள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு ரசிகர்கள் காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தனர். அதை ஏற்ற காவல்துறை, 36 நிபந்தனைகளுடன் இப்போராட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெற வேண்டுமெனத் தெரிவிக்கபட்டுள்ளது.

குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எவ்வித செயல்களிலும் ஈடுபடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை பின்பற்றாவிடில், சம்மந்தப்பட்டவர்கள் மீது  கடும்  நடவடிக்கைப்படும்  என்றும்  காவல்துறை  எச்சரிக்கை  விடுத்துள்ளது.