தமிழ்நாடு

சுழன்றடித்த ஃபோனி புயல் : 8 பேர் உயிரிழப்பு?

சுழன்றடித்த ஃபோனி புயல் : 8 பேர் உயிரிழப்பு?

webteam

ஃபோனி புயல் சுழன்றடித்து சிதைத்துப் போட்டதில், ஒடிசா மாநிலத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிதீவிர புயலாக கரையைக் கடந்த ஃபோனி புயல், ஒடிசாவில் தனது ஆக்ரோஷத்தை முற்றிலும் வெளிப்படுத்தியது. ஒடிசா மாநிலத்தையே சிதைத்துப் போட்ட ஃபோனி, மாநிலம் முழுவதும் தனது அடையாளத்தை அழுத்தமாக பதித்துச் சென்றது. ஒடிசா முழுவதும் ரயில்வே துறையின் அடிப்படைக் கட்டமைப்புகளை புரட்டிப் போட்டுள்ளது. 

ஹவுரா - சென்னை ரயில் உள்ளிட்ட 220 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கிழக்கு கடற்கரை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலை காரணமாக, புவனேஸ்வர் விமான நிலையத்திலிருந்து புறப்படும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலிருந்து புவனேஸ்வர் செல்லும் 9 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

மாநிலம் முழுவதும் ஏராளமான மின்கம்பங்களும், செல்போன் டவர்களும் சாய்ந்து விழுந்ததால், மின்சாரம், இன்டர்நெட் சேவைகள் துண்டிக்கப் பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப்படையின் 38 குழுக்கள ஒடிசாவில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பத்தாயிரத்துக்கும் அதிகமான கிராமங்களும், 50 -க்கும் அதிகமான நகரங்களும் ஃபோனியின் பாதிப்பில் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒடிசாவில் புயல் மழை பாதிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புயல் மற்றும் மழை பாதித்த பகுதிகளுக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்ப கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒடிசாவை புயல் தாக்கிய நிலையில், மேற்கு வங்கம், ஆந்திரா மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால், மேகாலயா, அசாம் மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.