தமிழ்நாடு

”ஒட்டகம் மேய்க்கவிட்டார்கள்”.. குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்.. பகீர் சம்பவம்!

”ஒட்டகம் மேய்க்கவிட்டார்கள்”.. குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்.. பகீர் சம்பவம்!

webteam

காய்கறி கடைவைத்து நஷ்டமடைந்து அந்தக் கடனை அடைக்கவும் தம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்கவும் குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற தமிழர் சுட்டுக் கொல்லப்ப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா லட்சுமாங்குடியில் வசித்து வரும் ராஜப்பா என்பவரின் ஒரே மகன் முத்துக்குமரன் (42). இவருக்கு வித்யா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இதில், ஒரு மகன் 12 ஆம் வகுப்பும் ஒரு மகன் மூன்றாம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கூத்தாநல்லூர் நகர் பகுதியில் காய்கறி கடை வைத்திருந்த முத்துக்குமரன், அதில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக வெளிநாட்டுக்குச் வேலைக்கு செல்லலாம் என திட்டமிட்டிருக்கிறார். அதன்படி இந்த மாதம் மூன்றாம் தேதி குவைத் நாட்டிற்கு அவர் சென்றிருக்கிறார். அங்கு சென்ற பிறகு தனது மனைவி, தாய், தந்தை, பிள்ளைகளோடு இரண்டு முறை தான் பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், `கிளீனிங் வேலை என்று சொல்லிவிட்டு பாலைவனத்தில் ஆடு ஒட்டகங்களை மேய்க்க விட்டுள்ளனர்’ எனக் கூறி புலம்பி இருக்கிறார். அதன் பிறகு ஏஜெண்டிடம் பேசி, `என்னை என் நாட்டிற்கு அனுப்புங்கள்’ எனக் கூறியிருக்கிறார் அதற்கு அவர் குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் பேசி ஏற்பாடு செய்வதாக தெரிவித்திருக்கிறார்.

அதன் பிறகு குவைத் நாட்டில் வேலை செய்யும் அவர் தெருவில் வசிக்கக்கூடிய பரக்கத் அலி என்பவரிடம் அவர் பேசியுள்ளார். அவரிடமும் அங்கு நடைபெற்ற கொடுமைகளையும் இன்னல்களையும் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி பரக்கத் அலியிடம் முத்துக்குமரன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று அவருடைய தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு பரக்கத் அலி பலமுறை முயன்றும் அவருடைய தொலைபேசி செயல்படவில்லை. அதன் பிறகு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என குவைத் நாட்டில் உள்ள செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதன் பிறகு 9 ஆம் தேதி மாலை முத்துக்குமரன் வீட்டிற்கு போன் செய்து அவர் இறந்து விட்டதாக அந்த ஏஜெண்ட் கூறியுள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது பெற்றோர் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் மகன் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தவும், முத்துக்குமரன் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கவும், தவறு செய்தவர்களை குவைத் அரசு தண்டிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்ற நபர் ஒரு வாரத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.