இறந்தவருடன் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் குடும்பத்தினர் pt web
தமிழ்நாடு

மதுரை: தானமாக பெற மறுப்பு - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கே இறந்தவரின் உடலோடு வந்த குடும்பத்தினர்!

PT WEB

மதுரையில் உயிரிழந்தவரின் உடலை தானமாக பெற அரசு மருத்துவமனை மறுத்துள்ளது. வாக்கு எண்ணும் மையமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருப்பதால், உடலை தானமாக பெறுவதில் சிக்கல் எனக்கூறி மறுப்பு தெரிவித்துள்ளது. பிணவறையில் உடலை வைத்துக் கொள்வதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியதால் இறந்தவரின் உறவினர்கள் வாக்குவாதம்.

தேர்தல் விதிகளை காரணம் காட்டி, தனது உடலை அரசு மருத்துவமனைக்கு எழுதிக் கொடுத்த முன்னாள் ராணுவ வீரரின் உடலை வாங்குவதற்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மறுத்துள்ளது. மதுரை எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரது தந்தை 83 வயதான வேலுச்சாமி. முன்னாள் விமானப்படை வீரராக இருந்துள்ளார். இந்நிலையில்தான் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது உடலை மருத்துவ மாணவர்களின் பயன்பாட்டிற்காக தானமாக பதிவு செய்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில், அவர் நேற்று உயிரிழந்த நிலையில், அவரது உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் கொண்டுவந்தனர். அப்போது மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான், உடலை தானமாக பெற மறுத்ததால், உயிரிழந்தவரின் உடலோடு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குடும்பத்தினர் வந்துள்ளனர்.

இறந்தவரின் மகன் இது தொடர்பாக கூறுகையில், “மதுரை மருத்துவக்கல்லூரியில் உடல்தானம் பெறும் இடம் உள்ளது. அங்கேதான் உடலை கொடுப்பதற்கு வந்தோம். ஓட்டுப்பெட்டி உள்ளது; அதனால் உடலை கொடுப்பதற்கு அனுமதி இல்லை என சொன்னார்கள். பிணவறையில் வாங்கி வைக்கிறோம் என சொன்னார்கள். விபத்து மற்றும் இன்னபிற விவகாரங்களில் இறந்தவர்களைத்தான் பிணவறையில் வைக்க வேண்டும்; உடல் தானம் கொடுத்தவர்களை அங்கு வைக்கக்கூடாது; வேதியியல் செயல்முறைகள் செய்யும் இடம் அனாடமியில் தான் இருக்கிறது; அங்குதான் வைக்க வேண்டும் என சொன்னோம். கலெக்டரிடம் அனுமதி கேட்பதற்காக காத்திருக்கிறோம். ஆனால் தாமதப்படுத்துகிறார்கள். மதியம் 1.30 மணிக்கு வந்தோம், மணி தற்போது 4 ஆகிற்று. சற்று சீக்கிரம் கொடுத்தால், தானம் கொடுத்தவர் என்ற மரியாதையுடன் சடங்கை செய்ய விரும்புகிறோம்” என்றார்