செய்தியாளர் ராஜன்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தருவைக்குளம் மீனவர்கள் 22 பேர்களில் 12 பேருக்கு, இலங்கை மதிப்பில் தலா ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது அந்நாட்டு நீதிமன்றம். இதனால் அதிர்ச்சியடைந்த கிராமத்தினர், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதோடு, தங்களை சந்திக்க நேரில் வராதது குறித்து ஆட்சியரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த 22 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர். அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்றம், அதில் 12 மீனவர்களுக்கு இலங்கை மதிப்பில் 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
அபராதம் செலுத்தாவிடில், 6 மாத காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, தருவைக்குளம் கிராமத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை 9 மணியளவில் தொடங்கிய போராட்டத்தில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாலையில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கிராம மக்கள், உடனடியாக மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பதில் சொல்ல வேண்டுமெனவும், இல்லையென்றால் தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்றனர்.
இதனையடுத்து கோட்டாட்சியர், கிராம மக்களை தொலைபேசி வாயிலாக மாவட்ட ஆட்சியரிடம் பேச வைத்தார். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகினுடைய உரிமையாளரின் மனைவி ஜான்சி ராணி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்திக்க நேரில் வராதது குறித்து ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய ஜான்சி ராணி, மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை அரசே செலுத்தி அவர்களை மீட்டு வர வேண்டுமென வலியுறுத்தினார். மேலும் இந்த விவகாரம் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை என குற்றஞ்சாட்டினார். அப்போது குறுக்கிட்ட மாவட்ட ஆட்சியர், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.
தொடர்ந்து, கைதாகியுள்ள மீனவர்களுக்கு சட்ட உதவிகள் உட்பட அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும் மீனவர்கள் விரைவில் மீட்கப்படாவிட்டால், மீண்டும் போராட்டங்கள் நடத்தப்படும் என கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.