தமிழ்நாடு

பனியன் கம்பெனியில் பணம் வசூல் - விசாரணையில் சிக்கிய ‘போலி’ அதிகாரிகள்

பனியன் கம்பெனியில் பணம் வசூல் - விசாரணையில் சிக்கிய ‘போலி’ அதிகாரிகள்

webteam

திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணம் வசூல் செய்ய வந்த போலியான அரசு அதிகாரிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூரிலுள்ள ஒரு பனியன் தயாரிப்பு நிறுவனத்திற்கு இருவர் காரில் வந்துள்ளனர். அவர்கள் தங்களை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு பணம் கேட்டுள்ளனர். அவர்கள் பேச்சின் மீது பனியன் நிறுவன ஊழியர் சந்தேகம் அடைந்துள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட காரில் வந்தவர்கள், அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று காரை பிடித்துள்ளனர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் அரசு அதிகாரிகள் போன்று போலியான அடையாள அட்டை தயாரித்து வைத்துக்கொண்டு இருந்தது தெரியவந்தது. அத்துடன் ஊடகத்துறையினர் போன்று  போலியான அடையாள அட்டை வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்கள் வைத்திருந்த காரை பறிமுதல் செய்தனர். அத்துடன் பணம் மற்றும் செல்போன்களை கைப்பற்றினர். மேலும், அரசு அதிகாரிகள் எனக்கூறிக்கொண்டு நிறுவனங்களிடம் யாரேனும் பணம் கேட்டால், உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.