மங்கையர்க்கரசி - ரூபிநாத்  முகநூல்
தமிழ்நாடு

‘என்னது நீங்க உத்தரப்பிரதேச IASஆ?’- தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரிடம் வசமாக சிக்கிய போலி அதிகாரி!

PT WEB

செய்தியாளர்: ராஜன்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் பொதுமக்களின் புகார்கள் குறித்த குறைதீர்க்கும் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறும். அந்த வகையில், நேற்று முன்தினம் (18.9.2024) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்

இந்த கூட்டத்திற்கு டிப்-டாப்பாக வந்த ஒரு பெண், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் “என் பெயர் மங்கையர்க்கரசி. நான் உத்திரபிரதேச மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக கல்வித்துறையின் செயலாளராக பணிபுரிகிறேன்” என அறிமுகம் செய்துள்ளார். மேலும், “என்னிடம் தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு நபர் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டார்” என புகார் அளித்தார். அந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், ‘அந்தப் பெண் நிஜமாகவே ஐஏஎஸ் அதிகாரிதானா?’ என்பது குறித்து விசாரணை செய்ய மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அப்பெண் போலி ஐஏஎஸ் என தெரிய வந்தது.

மங்கையர்க்கரசி - ரூபிநாத்

மேலும், அவர் நெல்லை மாவட்டம் தாளையூத்து பகுதியை சேர்ந்த மங்கையர்க்கரசி என்பதும் அவருடன் வந்த மற்றொரு நபர் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த ரூபிநாத் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போலியாக ஐஏஎஸ் என ஏமாற்றிய மங்கையர்கரசி மற்றும் அவருக்கு உதவியாக வந்த ரூபிநாத் ஆகியோரை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் உத்தரவு பிறப்பித்தார்.

இதைத் தொடர்ந்து, இவர்கள் இருவரையும் சிப்காட் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.