தமிழ்நாடு

பிஎஸ்சி படித்துவிட்டு மருத்துவம் பார்த்தவர் கைது

பிஎஸ்சி படித்துவிட்டு மருத்துவம் பார்த்தவர் கைது

webteam

பி.எஸ்.சி படித்து விட்டு  நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர்  மாவட்டத்தில் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், ஏராளமானோர் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருவாலங்காடு, திருத்தணி பகுதிகளை சேர்ந்த  பச்சிலங்குழந்தை, சிறுமி உட்பட 4 பேர் இறந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.  

குறிப்பாக திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய ஒன்றியங்களில் கிராமமக்கள் காய்ச்சல் ஏற்பட்டால், கிராம பகுதியில் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்க்கும் போலி மருத்துவர்கள், மருந்துகடை வியாபாரிகளிடம் சென்று சிகிச்சை பெறுவதால் காய்ச்சல் தீவிரமடைந்து கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். 

(கைதான பூபாலன்)

இது குறித்து சுகாதாரத் துறைக்கு வந்த புகாரின் பேரில் திருவள்ளூர் மாவட்ட சுகாதரப்பணிகள் இணை இயக்குநர்  டாக்டர் தயாளன் தலைமையில் போலி மருத்துவர்களை கைது செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தினர். இதில் ஒரு பகுதியாக டாக்டர் தயா சாந்தி தலைமையில் மருத்துவ குழுவினர் பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் செயல்பட்டு வந்த மருத்துவமனையில் சோதனையிட்ட போது,  பூபாலன் (45) என்பவர் பி.எஸ்.சி படித்து விட்டு கடந்த சில ஆண்டுகளாக நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. 

இதனை அடுத்து அவரை மருத்துவ குழுவினர்  போலீசாரிடன் ஒப்படைத்தனர். பள்ளிப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து போலி மருத்துவர் பூபாலன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.