Police station pt desk
தமிழ்நாடு

மயிலாடுதுறை: நகைகளை அடகு வைத்துவிட்டு திருடு போனதாக பொய் புகார் - தம்பதியை எச்சரித்த எஸ்பி

webteam

செய்தியாளர்: ஆர்.மோகன்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மூவலூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், கடந்த 2-ஆம் தேதி தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெளிப்பக்க கதவின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 11 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1,10,000 பணம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டதாக குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

House

புகாரை பெற்ற போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் தனிப்படை போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், திருட்டுப் போனதாக கூறப்பட்ட சம்பவம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தெரியவந்தது. மணிகண்டன் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகிய இருவரும் 2 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.74,000 ரொக்கப் பணத்தை தனது வீட்டில் பதுக்கி வைத்ததோடு, 9 சவரன் நகைகளை அடமானத்தில் வைத்து இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, தொடர் விசாரணை மேற்கொண்ட குத்தாலம் போலீஸார், பொய்யான புகார் அளித்தமைக்காக மணிகண்டன் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்தனர். மேலும் விசாரணையின்போது மணிகண்டன் தம்பதியினர் தாமாக முன்வந்து ஒப்படைத்த 2 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.74,000 பணம் ஆகியவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. பொய் புகார் அளிப்பவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.