தமிழ்நாடு

FACT CHECK: பொதுமக்களின் பிரைவசியை மீறுகிறதா சென்னை காவல்துறை? - முழு விவரம்!

FACT CHECK: பொதுமக்களின் பிரைவசியை மீறுகிறதா சென்னை காவல்துறை? - முழு விவரம்!

JananiGovindhan

தமிழகத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறை சார்பில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக சென்னை போன்ற முக்கிய நகரங்களில் இரவு நேரத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்கும் விதமாக சிறப்பு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் தினந்தோறும் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், “விசித்திரமான சம்பவம் ஒன்று நேற்று இரவு தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை வழியாக வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது நடந்தது. இரண்டு போலீசார் என்னை நிறுத்தி, என் முகத்தை போட்டோ எடுத்துவிட்டு போகச் சொன்னார்கள். ஏன் எதற்காக என கேட்டபோது எதுவுமே சொல்லாமல் இருந்துவிட்டார்கள். இது என்ன புதிய நடைமுறை?” எனக் கேள்வி எழுப்பி சென்னை காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையை டேக் செய்து ட்விட்டரில் சித்தார்த் என்ற நபர் ட்வீட் போட்டிருக்கிறார்.

இதற்கு பெருநகர சென்னை காவல்துறை தரப்பில் அந்த நபரின் பதிவுக்கு பதிலளிக்கப்பட்டிருக்கிறது. அதில், “இரவு ரோந்து பணியின் போது போலீசாருக்கு ஒத்துழைத்ததற்கு நன்றி சித்தார்த். இரவு நேரத்தில் பொதுவெளியில் உலா வரும் ஆட்களின் அடையாளத்தை காணவே இந்த நடைமுறை. இதன் மூலம் குற்றவாளிகளை சுலபமாக பிடிக்க ஏதுவாக இருக்கிறது. நீங்கள் எதற்கும் கவலைகொள்ள வேண்டாம்.” எனக் குறிப்பிட்டு தெளிவுபடுத்தியுள்ளது.

இதனைக் கண்ட பல நெட்டிசன்களும், “குற்றவாளிகளை அடையாளம் காண்பதுதான் நோக்கமென்றால் அதனை மக்களிடம் இன்ன காரணத்துக்காகத்தான் செய்கிறோம் என்பதை குறிப்பிட வேண்டியது போலீசாரின் கடமையே. அதனை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இருப்பினும் இந்த நடைமுறை வரவேற்கத்தக்கதுதான்” என்று நெட்டிசன்கள் அதே ட்வீட் பதிவில் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.”

இதுபோக, தனி நபர் ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரை போட்டோ எடுப்பது அரசியல் சாசன சட்டத்தின்படி குற்றம் என்பதை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கை சுட்டிக்காட்டியும் பதிவிடப்பட்டிருக்கிறது.

அதன்படி, பணமோசடி விவகாரத்தில் NSE ஊழியர்களின் ஃபோன் உரையாடல் போன்றவற்றை சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்டது தொடர்பான வழக்கில் மும்பை முன்னாள் காவல் ஆணையர் சஞ்சீவ் பாண்டேவுக்கு ஜாமின் வழங்கும் போது டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்மீத் சிங் சுட்டிக்காட்டியுள்ளார். அதில், “தனி நபரின் ஒப்புதல் இல்லாமல் தொலைபேசி இணைப்பை ஒட்டுக்கேட்பது, பதிவு செய்வது ஆர்டிகிள் 21ன் படி தனியுரிமை மீறல் என்றும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், “இரவு ரோந்து பணியின் போது சாலையில் செல்லும் பொதுமக்களை நிறுத்தி போட்டோ எடுக்கு சென்னை போலீசின் இந்த நடவடிக்கைக்கு என்ன அரசாணை இருக்கிறது? இது தனியுரிமை மீறல் இல்லையா? எப்படி இதுப்பற்றி கவலைக்கொள்ள வேண்டாம் என சொல்கிறீர்கள்? இது ஜனநாயக நாடுதானா அல்லது காவல்துறையால் ஆளப்படுகிறதா?” என்றும் பொது மக்கள் தரப்பில் இருந்து கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக, கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி Face Recognition Software (FRS) என்ற நடைமுறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இது தொடர்பான அறிவிப்பில், இந்த Face Recognition Software முறை மூலம் குற்றவாளிகளை கச்சிதமாக பிடிக்க முடியும் என்றும் அந்த மென்பொருளில் சந்தேகிக்கப்படும் நபர்களின் போட்டோக்கள் மற்றும் தரவுகள் உள்ளிடப்பட்டிருக்கும்.

அதனை வைத்து சந்தேகிக்கும் நபர்களின் போட்டோவை கொண்டு ஒப்பிட்டு பார்க்கவும், காணாமல் போனவர்களை கண்டறியவும், வேறொரு காவல்நிலைய எல்லையில் குற்றம் செய்து தப்பிப்பவர்களை பிடிக்கவும் இந்த சாஃப்ட்வேர் உதவிக்கரமாக இருக்கும். அதற்காக Crime and Criminal Tracking Network Systems (CCTNS) என்பதன் மூலம் கண்காணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.