தமிழ்நாடு

சென்னை: சவ ஊர்வலத்தில் வெடி வெடித்தபோது பறிபோன சிறுவனின் கண் பார்வை

கலிலுல்லா

சவ ஊர்வலத்தில் வெடித்த வெடியால் 13 வயது சிறுவனின் பார்வை பறிபோன பரிதாப சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. தன்னுடைய மகனுக்கு மீண்டும் பார்வை கிடைக்க வேண்டும் என பெற்றோர் கண்ணீர் வடிக்கின்றனர்.

சென்னை எம்.ஜி.ஆர் நகர் பச்சையப்பன் தெருவில் வசித்து வருபவர் சந்தோஷ். 13 வயதான இவர் கடந்த 15-ம் தேதி தனது சகோதரி புவனேஷ்வரி வேலை செய்யும் பேன்ஸி ஸ்டோருக்கு சென்றுள்ளார். அப்போது, அந்த தெருவில் சவ ஊர்வலம் சென்றுள்ளது. சிறுவன் சந்தோஷ் கடைக்குள் செல்வதற்காக வாசலில் நின்றிருந்தார். சவ ஊர்வலத்தின்போது, பேன்ஸி ஸ்டோர் கடை வாசலிலேயே நாட்டு வெடி ஒன்றை சிலர் வைத்தனர்.

அது வெடித்தபோது அங்கிருந்த சிறுவன் சந்தோஷ் இடது கண்ணில் கல் பட்டது. இதனால் வலியால் துடித்தார். ரத்தம் கொட்டியதால் கடையின் உரிமையாளர் செல்வி என்பவர் உடனே சிகிச்சைக்காக எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் தற்போது சிறுவன் சந்தோஷின் இடது கண் பார்வை பறிபோய் விட்டது. யாரோ செய்த தவறால் தன் மகன் பாதிக்கப்பட்டுள்ளானே என பெற்றோர் கண்ணீர் வடிக்கின்றனர்.

தனது தம்பியின் கண் பார்வை பறிபோக காரணமானவர்களின் மீது காவல்துறை தக்க தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் என்றும், நான் எப்படி என் தம்பியை பார்த்தேனோ அதைபோல மீண்டும் பார்க்க வேண்டும் என்று சகோதரி வேதனையோடு தெரிவித்துள்ளார். சென்னையில் சவ ஊர்வலங்களில் எப்போதும் நாட்டு வெடி வெடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சந்தோஷ் கண் பார்வை பறிபோனதற்கு நாட்டு வெடி காரணமாக இருந்தாலும், இது போன்ற ஆபத்தானவைகளை வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் முன் வைக்கினறனர்.

சந்தோஷின் கண் பார்வை பறிபோன சம்பவம் தொடர்பாக எம்ஜிஆர் நகர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜாபர்கான்பேட்டை ஜான்கென்னடி தெருவை சேர்ந்த விமலா என்பவரின் இறுதி ஊர்வலத்தின்போது சண்முக வேல் என்பவர் நாட்டு வெடி வெடித்ததும், அந்த வெடியால் தான் சிறுவனின் பார்வை பறிபோனது தெரியவந்தது.

இதனையடுத்து நாட்டு வெடி வாங்கியதாக ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த குணசேகரன், பட்டாசு வெடித்ததாக சண்முக வேல் மற்றும் சட்டவிரோதமாக நாட்டு வெடி விற்றதாக செல்வகுமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். வெடிபொருளை அஜாக்கிரதையாக கையாளுதல், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படுதல், மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.