இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார். சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
முழுமையான ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 4 நாட்களுக்கு கடைகள் ஏதும் இருக்காது என்பதால், மளிகை, காய்கறி, பால் போன்ற பொருட்களை வாங்கிக் கொள்ள சென்னையில் பொதுமக்கள் இன்று காலை முதலே குவிந்தனர். சென்னையின் பல இடங்களில் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து தேவையான பொருட்களை மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,
''பல இடங்களுக்கு 26ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால் இன்று கடைகளில் மக்கள் கூட வாய்ப்புள்ளது.
நெரிசலைத் தவிர்க்கும் வகையில், இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து, மக்கள், தனிமனித விலகலுடன் பொருட்களை வாங்கிட உரிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்