தமிழ்நாடு

நூல் விலையைக் கட்டுப்படுத்த கோரி ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் 2 நாள் வேலை நிறுத்தம்

நூல் விலையைக் கட்டுப்படுத்த கோரி ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் 2 நாள் வேலை நிறுத்தம்

நிவேதா ஜெகராஜா

நூல் விலையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி கரூரில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். இதனால், கரூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர், திருப்பூர், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகள் மூலம் பனியன், ஆயத்த ஆடைகள், வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி செய்யப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. ஜவுளி உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. நூல் விலையைக் கட்டுப்படுத்த ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு பஞ்சு இறக்குமதிக்கான வரியை ரத்து செய்தது. இருந்தாலும், தொடர்ந்து நூல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த டிசம்பர் 2021 ஆம் ஆண்டு 40% விலை உயர்ந்த நூல், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 50 சதம் விலை உயர்ந்துள்ளது சில நூல் ரகங்கள் 100 சதம் விலை உயர்ந்துள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். நூல் விலையை கட்டுப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.

தொடர்ந்து நூல் விலை உயர்ந்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து பெற்ற ஆர்டர்களை நஷ்டத்தில் செய்ய வேண்டிய நிலையில் உள்ளதாக கரூர் ஏற்றுமதியாளர்கள் கூறி வந்தனர். விலையை கட்டுக்குள் கொண்டுவர நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும், நூல் உற்பத்தியாளர்கள் பதுக்கலை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் மத்திய அரசு பஞ்சு இறக்குமதிக்கான வரியை ரத்து செய்தும் நூல் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்தி வருவதை கண்டித்து விலையை கட்டுப்படுத்தக் கோரி, கரூரில் உள்ள ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தை இன்று தொடங்கினர். கரூரில் ஆண்டொன்றுக்கு 8 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஜவுளி உற்பத்தி செய்யப்படுகிறது. 4 ஆயிரம் கோடி மதிப்பிலான ஜவுளி பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கரூரில் உள்ள ஜவுளி உற்பத்தி தொழிலில் நேரடியாக 2 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் குறிப்பிடத்தக்கது. இரண்டு நாள் வேலை நிறுத்தத்தால் சுமார் 100 கோடிக்கு உற்பத்தி பாதிக்கும் எனவும், 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்கின்றனர்.