krishnagiri pt web
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி வெடிவிபத்து: உண்மையில் நடந்ததென்ன? புதிய தலைமுறை ஆய்வில் கிடைத்த தகவல்கள்! #PTExclusive

கிருஷ்ணகிரி விபத்து தொடர்பாக இருவேறு விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் புதிய தலைமுறை மேற்கொண்ட கள ஆய்வில் சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன.

PT WEB

கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் பட்டாசு கடை வைத்திருந்தவர் ரவி. கடந்த சனிக்கிழமை காலை 9:45 மணியளவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்து மிகப்பெரிய பதற்றத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. இந்த விபத்தில் பட்டாசு கடை வைத்திருந்த ரவி, அவரது மகள் ருத்திகா, மகன் ரூத்தீஷ் மற்றும் பட்டாசு கடை அருகே இருந்த வெல்டிங் பட்டறையில் பணியாற்றும் இப்ராஹிம், இம்ரான், மற்றும் ஹோட்டல் வைத்திருந்த ராஜேஸ்வரி, பட்டாசு கடை பின்புறம் தண்ணீர் குடோனில் பணியாற்றிய சரசு, ஜேம்ஸ், மற்றும் உணவகத்திற்கு சாப்பிட வந்த சிவா என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். இவ்வெடி விபத்தில் 300 மீட்டர் தூரத்திற்கு இறந்தவர்களின் உடல்கள் தூக்கி வீசப்பட்டன. சாலையில் சென்ற பலர் வெடி விபத்தில் சிக்கி காயமடைந்தனர். தற்போதும் 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Krishnagiri | FireAccident

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பட்டாசு கடை உரிமையாளரின் மனைவி ஜெயஸ்ரீ மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளார். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மருத்துவ குழுவினர் விரைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவத்தின் காரணமாக விபத்து நடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தூரத்திற்கு உள்ள குடியிருப்பு வீடுகளில் கதவுகள், கண்ணாடி ஜன்னல்கள், வணிக நிறுவனங்களின் கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளது. விபத்தை நேரில் பார்த்தவர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து கட்டிடத்தின் மேற்கூரை 10 அடி உயரத்திற்கு மேலே சென்று கீழே விழுந்ததாக கூறுகின்றனர். இந்த வெடி விபத்தில் ஏழு கடைகள் தரைமட்டமாகி உள்ளன.

தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் சரயு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர், சட்டமன்ற உறுப்பினர்கள் மதியழகன், அசோக் குமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்லகுமார், தம்பிதுரை, ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக, வெடி விபத்து நடைபெற்ற இடத்தின் உரிமையாளர் அந்தோணி ஆரோக்கியராஜ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கிருஷ்ணகிரி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வெடி விபத்திற்கு ராஜேஸ்வரி என்பவர் நடத்தி வந்த உணவகத்தில் சிலிண்டர் வெடித்ததுதான் காரணம் என கூறப்பட்டுள்ளது.

அதன் பெயரில் போலீசார் இந்திய தண்டனை சட்டம் 174 இயற்கைக்கு மாறான விபத்து மரணங்கள் என்கிற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தடவியல் நிபுணர்கள் வெடி விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து அங்கு இரண்டு கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டர்கள் சேகரித்து விபத்துக்கான காரணம் கேஸ் சிலிண்டர் வெடிப்பு என அறிக்கை சமர்ப்பித்து உள்ளதாக தமிழக உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் அமைச்சர் சக்கரபாணியும் தெரிவித்துள்ளார்.

இதனால் விபத்துக்கான காரணம் உணவகத்தில் ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் வெடிப்பு என சொல்லப்பட்டது.

இந்த சூழ்நிலையில், வெடி விபத்து நடத்த இடத்தை பார்வையிட்டுச் சென்ற அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை நேற்று நாடாளுமன்ற மேலவையில் கேள்வி நேரத்தில் கிருஷ்ணகிரி பட்டாசு வெடிப்பு சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர் “கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாக தமிழக அரசும், அமைச்சரும் தெரிவிக்கின்றனர்” என்றார்.

அப்போது தம்பி துரைக்கு பதில் தரும்விதமாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “தமிழகத்தில் கிருஷ்ணகிரியில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு கேஸ் சிலிண்டர் காரணம் அல்ல. அந்த முகவரியில் கேஸ் இணைப்பு எதுவும் இல்லை. நாடு முழுவதும் 36 கோடி அளவிற்கு கேஸ் சிலிண்டர் இணைப்புகள் உள்ளன. கேஸ் சிலிண்டர் வெடித்தால் இந்த அளவு பாதிப்பு இருக்காது. அங்கு வேறு ஏதோ வெடி பொருட்கள் இருந்துள்ளது. தமிழக அமைச்சர் குடியிருப்பு பகுதியில் எப்படி பட்டாசுகள், வெடி மருந்துகள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது என விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார். எனவே இது கேஸ் சிலிண்டரால் ஏற்பட்ட விபத்து இல்லை” என தெரிவித்துள்ளார்.

krishnagiri accident

இருப்பினும் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில், உணவகத்தில் ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் வெடிப்பு விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த இந்த முரண்கள், கிருஷ்ணகிரி மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. “கேஸ் சிலிண்டர் வெடித்தால் இந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுமா, உடல்கள் சிதறி தூக்கி வீசப்படுமா, ஒரு கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்தால் நான்கு கடை கடந்து உள்ள பட்டாசு கடையிலும் தீ விபத்து ஏற்படுமா, சாலையில் செல்லும் நபர்களுக்கு இந்த சிலிண்டர் வெடிப்பால் பாதிப்பு ஏற்படுமா” என பல்வேறு கேள்விகளும் எழுப்புகின்றனர் மக்கள்.

மற்றொருபுறம் பட்டாசுகள் விற்பனை செய்ய அனுமதி பெற்றுவிட்டு சட்ட விரோதமாக அனுமதியின்றி அதிக அளவில் வெடி மருந்துகள் பதுக்கி வைத்திருந்ததாகவும், கல் குவாரிகளுக்கு பயன்படுத்தும் ஜெலட்டின் போன்ற வெடி மருந்துகள் பதுக்கி வைத்திருந்ததாகவும் அப்பகுதி மக்கள் சிலர் பேசுகின்றனர். மேலும் ‘வெடி மருந்து தயாரிக்கும் போது விபத்து நேர்ந்து இருக்கலாம். பட்டாசு கடையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட வெடி மருந்துகள் வெடித்து விபத்து நடந்தது என தெரிந்தால் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படும். ஆகவே உண்மைக்கு புறம்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கலாம்’ எனவும் பேசப்படுகிறது. இந்த யூகங்களுக்கு ஏற்றவாறு நாடாளுமன்றத்தில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் சொன்னதும் அமைந்துவிட்டது.

இதனிடையே மாவட்ட ஆட்சியர் சரயு, இந்த வெடி விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கிருஷ்ணகிரி சிப்காட் நிலை எடுப்பு வருவாய் அலுவலர் பவணந்தி என்பவரை விசாரணை அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். அவர் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதுகுறித்து புதிய தலைமுறை புலனாய்வு மேற்கொண்டது.

முதல் கட்டமாக வெடி விபத்துக்கு காரணம் என கூறும் உயிரிழந்த உணவாக உரிமையாளர் ராஜேஸ்வரியின் குடும்பத்தினரை அணுகினோம். அப்போது உயிரிழந்த ராஜேஸ்வரியின் கணவர் பாலமுருகன், ராஜேஸ்வரியின் மருமகன், அவரது மகள் சரண்யா, மருமகள் வனிதா ஆகியோர் பல அதிர்ச்சி சம்பவங்களை தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், “கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ராஜேஸ்வரி உணவகம் வைத்தார். ஆனால் உணவுகள் இங்கு தயாரிக்கப்படவில்லை . மற்றொரு கடையில் இருந்து தயாரித்து எடுத்து வந்து இங்கு விற்பனை செய்யப்படும். சிறிய அளவில் ஒரு கேஸ் அடுப்பு வைத்துக்கொண்டு அதில் உணவகத்திற்கு வரும் நபர்கள் கேட்கும் ஆம்லெட், தோசை போன்றவை மட்டும் போட்டு தருவார் அவர். இதர நேரங்களில் டீ கடை வைத்திருந்தார். இந்த இரண்டிற்கும் ஒரே சிலிண்டர்தான் பயன்படுத்தி வந்தார். தோசை கல்லுக்கு ஒரு ரெகுலேட்டர் - டீ கடைக்கு ஒரு ரெகுலேட்டர் என ஒரு சிலிண்டருக்கு இரண்டு ரெகுலேட்டர் பயன்படுத்தி வந்ததார். கடையில் மற்றொரு வணிக சிலிண்டர் காலியாக இருந்தது” என்றனர்

மேலும், “வெடி விபத்திற்கு உணவகத்தில் ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் வெடிப்பு காரணம் என்றால் உயிரிழந்த ராஜேஸ்வரி உடலில் தீக்காயங்கள் இருந்திருக்க வேண்டும் அல்லது அவர் அணிந்திருந்த புடவை மற்றும் தலைமுடி - இவை அல்லாமல் உணவகத்தில் உள்ள பொருட்கள் தீ பரவி கருகி இருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த ஒரு நிகழ்வும் மீட்பு பணியில் தென்படவில்லை. உயிரிழந்த ராஜேஸ்வரி உடல் சிறு தீக்காயங்கள் கூட இல்லாமல் இருந்தது. அவர் அணிந்திருந்த கால் கொலுசு, தங்க நகைகள் கருகாமல் அப்படியே இருந்தது.

காவல்துறை கூறுவது போல் சிலிண்டர் வெடித்து இருந்தால் முதலில் ராஜேஸ்வரி தூக்கி வீசப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், அவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்து மீட்கப்பட்டார். வேண்டுமென்றே யாரையோ காப்பாற்றுவதற்காக உயிரிழந்த ராஜேஸ்வரி மீது பழி சுமத்துகின்றனர். கடையில் இருந்த இரண்டு சிலிண்டர்கள் மீட்பு பணியில் போலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு சிலிண்டர் வீட்டு பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடிய சிலிண்டர். மற்றொன்று வணிகரீதியான சிலிண்டர். அதுவும் காலியாக இருந்த சிலிண்டர். இப்படி இரண்டு சிலிண்டர் மீட்கப்பட்டுள்ள நிலையில் வெடித்தது எந்த சிலிண்டர் என காவல்துறையினர் உறுதிப்படுத்தவில்லை. இரண்டு சிலிண்டர்களும் நன்றாக உள்ளது. இதனால் எங்களுக்கு மிகப்பெரிய குழப்பம் நிலவுகிறது. சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து அதனால் ஏற்பட்ட விபத்தை மறைக்கவே எங்கள் மீது பழி சுமத்துகின்றனர்” என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

மேலும் சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனங்களும், விபத்து நடந்த இடத்திற்கு சிலிண்டர் விநியோகம் செய்யவில்லை என உறுதிப்படுத்துகின்றனர். சிலிண்டர் வெடித்திருந்தால் தீ பரவும் தீ பிடிக்கும். 40 முதல் 80 சதவீதம் வரை தீக்காயங்கள் ஏற்படும். ஆனால் உடல்கள் சிதறி தூக்கி வீசும் நிலை ஏற்படாது. இந்த விபத்து பல்வேறு கேள்விகளையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு பட்டாசு கடை நடத்திய ரவி சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாகவும், பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாகவும் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்தில் புகார் அளித்ததாகவும் புகாரின் பேரில் தீயணைப்புத் துறையினர் ஆய்வு செய்து அவரை எச்சரித்து வந்ததாகவும் சிலர் கூறும் நிலையில் இந்த வெடி விபத்து சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு ‘சிலிண்டர் வெடிப்புதான் விபத்திற்கு காரணம்’ என தெரிவிக்கும் நிலையில் மத்திய அரசு ‘சிலிண்டர் வெடிப்பு காரணம் இல்லை’ என தெரிவித்துள்ளது. இதனால் வெடி விபத்து சம்பவம் மத்திய மாநில அரசுகளிடையேவும் கருத்து வெடிப்பாக மாறி வருகிறது.