கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விற்பனை வழக்கில் கைதானவர் புதிய தலைமுறை
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் - சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்!

ஜெனிட்டா ரோஸ்லின்

செய்தியாளர் - ஜெ.அன்பரசன்

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 49 பேர் உயிரிழந்த சூழலில், ஐந்து தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக தற்போதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களிடம் விசாரணை நடத்தியதில் முக்கிய தகவல்கள் பல கிடைத்துள்ளன.

ஏற்கெனவே, இந்த வழக்கில் விஷச்சாரயத்தை விற்பனை செய்த கன்னுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்படுள்ளனர்.

இவர்களை விசாரணை செய்ததில், சின்னத்துரை என்பவரிடமிருந்து கள்ளச்சாராயம் வாங்கி விற்பனை செய்ததாக தெரிவித்திருந்தனர். தொடர்ந்து, சின்னத்துரையிடம் விசாரணை நடத்தியதில், சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனாலை மாதேஷிடமிருந்து வாங்கியதாகவும் அதனை கோவிந்தராஜ்க்கு விற்பனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், புதுச்சேரிக்கும் மெத்தனாலை சின்னத்துரை விற்பனை செய்துள்ளது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இதனால், மாதேஷ் என்பவரையும் சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் கடந்த 17 ஆம் தேதி மாதேஷிடமிருந்து, மெத்தனாலை வாங்கியுள்ளார் சின்னத்துரை. இவரிடமிருந்து, கோவிந்தராஜ் மெத்தனால் அடங்கிய 60 லிட்டர் நான்கு டியூபுகள், 30 லிட்டர் 3 டியூபுகள், 100 சிறிய பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார்.

முதலில், இதனை குடித்து பார்த்த கோவிந்தராஜின் சகோதரர் தாமோதரன் மெத்தனால் கெட்டுபோய் உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆனால், சின்னத்துரை, ’இது கெட்டு போகவில்லை; உயர்தர சரக்கு என்று கூறி விற்பனை செய்யுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். மேலும், இருமாநிலங்களில் உள்ள பல்வேறு சோதனைச் சாவடிகளை கடந்து விற்பனைக்கு மெத்தனால் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறிப்பாக, எப்பொழுதும் முழுப்பணத்தை வாங்கி பிறகே மெத்தனால் கொடுக்கும் சின்னதுரை தற்போது முன்பணம் மட்டுமே பெற்றுள்ளார் என்று விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆந்திராவில் செயல்படாத ரசாயன நிறுவனங்களில் இருந்து காலாவதியான மெத்தனாலை மாதேஷ் வாங்கி விற்றுள்ளார்.

இந்நிலையில், தற்போது சின்னத்துரையின் நண்பர்களான சங்கராபுரத்தை சேர்ந்த ஜோசப் ராஜர், பாண்டிச்சேரியை சேர்ந்த மதன்குமார் உள்ளிட்ட 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாதேஷ் எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து மெத்தனாலை வாங்கினார், இதன் பின்புலத்தில் யார் உள்ளனர் என்று தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.