தமிழ்நாடு

”குண்டு வைப்பதில் நாங்க வல்லவர்கள்” - பாஜக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் பேச்சு!

”குண்டு வைப்பதில் நாங்க வல்லவர்கள்” - பாஜக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் பேச்சு!

webteam

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் பாண்டியன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரியில் பொதுக்குடிநீர் குழாய் அருகே துணி துவைப்பதில் ஏற்பட்ட தகராறில் திமுக பிரமுகர் மற்றும் அவரது உறவினர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த ராணுவ வீரர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக தி.மு.க கவுன்சிலர் கைதுசெய்யப்பட்டார். இதைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னை சிம்சன் எதிரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் கரு.நாகராஜன், வி.பி துரைசாமி உள்ளிட்ட பாஜகவினர், முன்னாள் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அடித்து கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் பிரபு குடும்பத்துக்கு, முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

இதில் பேசிய முன்னாள் ராணுவ வீரர் பாண்டியன், “ஒரு விஷயத்தை இங்கே எச்சரிக்கிறேன். உலகிலேயே ஒழுக்கத்துக்குப் பெயர்போனவர்கள் ராணுவ வீரர்கள். இதை எங்கு வேண்டுமானாலும் பார்க்கலாம். ராணுவ வீரர்களைச் சீண்டினால், அது தமிழகத்திற்கு நல்லதல்ல; தமிழக அரசிற்கும் அது நல்லதல்ல. ராணுவ வீரர்கள், எந்தவொரு விஷயத்தைச் செய்தாலும் அதை ஒழுக்கத்துடனும், உத்வேகத்துடனுமே செய்யக்கூடியவர்கள். அப்படிப்பட்ட எங்களுக்கு, நீங்கள் பரீட்சை வைத்துப் பார்க்க வேண்டுமென நினைத்தால், அது நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுத்துவிடும். இதை, நான் இங்கே அன்பாகத்தான் சொல்கிறேன். மீடியா தோழர்களுக்கும் இதைச் சொல்கிறேன்.

இங்கு அமர்ந்திருக்கும் அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களும் குண்டு வைப்பதில் திறமைசாலிகள். சுடுவதில் திறமைசாலிகள். சண்டையிடுவதில் திறமைசாலிகள். ஆகையால் இதுபோன்ற வேலைகள் எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், நாங்கள் இதை எல்லாம் செய்வதாக இல்லை. எங்களைச் செய்ய வைத்துவிடாதீர்கள் என்றுதான் தமிழக அரசை எச்சரிக்கிறேன்” எனப் பேசியிருந்தார். அவருடைய பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாவதுடன், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் ராணுவ வீரர் பாண்டியனிடம், “தாங்கள் பேசிய கருத்து மிரட்டல் தொனியில் உள்ளதே” எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போதும் அவர் மிரட்டல் தொனியிலேயே பதில் அளித்தார். அவர், “இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை. நான் சொல்கிறேன். இனிமேலும் இது தொடர்ந்தால், செய்வோம்” என சவால் விட்டார். தொடர்ந்து அவர், “உலகத்திலேயே ஒழுக்கமான ஆர்மி. நீங்கள் இனிமேல் செய்தால் நாங்கள் செய்வோம்” என்றார்.

அப்போது நிருபர் ஒருவர், “நீங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கிறீர்களா” எனக் கேட்க, அதற்கு அவர், “இது, தீவிரவாதம் அல்ல. ஏன், எங்கள் தோழனைக் கொன்றீர்கள்?, எப்படி எங்கள் தோழனைக் கொன்றீர்கள், அதற்கு நியாயம் கிடைக்க வேண்டும். இது மிரட்டல்தான். தமிழக அரசை எச்சரிக்கிறேன்” என சத்தமிட்டு பேசியதுடன் நிருபர்களைப் பேசவிடாமல் ”பாரத் மாதாவுக்கு ஜி” என எல்லோரும் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து நிருபர் ஒருவர், “நாங்கள் மீடியா” எனச் சொல்ல, அதற்கு அவர், “மீடியா எல்லாம் திமுகவுக்கு சொம்பு தூக்குகிற கூலிகள். நீங்கள் நடுநிலையாக இருக்க வேண்டும்” என ஆவேசமாக பேசினார். 

முன்னாள் ராணுவ வீரரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

-ஜெ.பிரகாஷ்