செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
ஆவடி அருகே வெள்ளானுர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (67). ராணுவத்தில் பணியாற்றிய இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுள்ளார். தற்போது ஆவடி தனியார் கல்லூரியில் உதவி பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 3 ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இவர்மீது, சாலையின் குறுக்கே திடீரென வந்த மாடு மோதியதாக கூறப்படுகிறது.
இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த ராமமூர்த்தி பலத்த காயம் அடைந்துள்ளார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற அவர், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.