தமிழ்நாடு

“பியூட்டி பார்லர் என நினைத்தோம்; ஆனால்..” - முன்னாள் பெண் காவலருக்கு நேர்ந்த விபரீதம்

“பியூட்டி பார்லர் என நினைத்தோம்; ஆனால்..” - முன்னாள் பெண் காவலருக்கு நேர்ந்த விபரீதம்

webteam

பியூட்டி பார்லர் என நினைத்து சென்ற தன்னையும், தனது மகளையும் தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என முன்னாள் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் நகரை சேர்ந்தவர் வசந்தா (55). இவர் தஞ்சை மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக இருந்தவர். விருப்ப ஓய்வு பெற்று தற்போது வீட்டில் உள்ளார். இந்நிலையில், வசந்தாவும் அவரது மகளும் ஆன்லைனில் பியூட்டி பார்லர் எங்கிருக்கிறது என தேடியுள்ளனர். அப்போது சீனிவாசபுரம் அருகே உள்ள பிரதாபபுரம் என்ற பகுதியில் ஒரு பியூட்டி பார்லர் இருந்ததாக விளம்பரம் வந்துள்ளது. இதையடுத்து அதில் உள்ள அலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியபோது நேரில் வாருங்கள் என்று கூறியுள்ளனர்.

இதைதொடர்ந்து வசந்தாவும் அவரது மகளும் காரில் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் அது பியூட்டி பார்லர் போல் இல்லையே என இருவரும் சந்தேகம் அடைந்து, அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அப்போது அங்கிருந்து வெளியே வந்த சிலர் வசந்தாவை தாக்கி காரை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அவரது மகளையும் தகாத வார்த்தைகளால் பேசி திட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து வசந்தா தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வசந்தாவும், அவரது மகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட பியூட்டி பார்லர் உரிமையாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில், வசந்தா தங்களை தரக்குறைவாக பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.