தமிழ்நாடு

“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்

“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்

சங்கீதா

‘சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு குறித்து தன்னிடம் கேட்க வேண்டாம். காவல்துறையிடம் கேளுங்கள். நான் ட்ரெண்டிங்கில் இருப்பதால் தன்னை வைத்து வியாபாரம் செய்யாதீர்கள்’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

5 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜராகி கையெழுத்திட்டார். ஏற்கெனவே ஒவ்வொரு வாரமும் திங்களன்று ஆஜராகி கையெழுத்திட்டு வந்த நிலையில், பிரதி வாரம் ஆஜராக இயலாத நிலை இருப்பதாகவும், நிபந்தனையில் சற்று தளர்வு வழங்குமாறும், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனடிப்படையில் மாதம் இருமுறை ஆஜராகி கையெழுத்திடுமாறு நீதிமன்றம் தளர்வு வழங்கியதை அடுத்,து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் இன்று ஆஜராகி கையெழுத்திட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, “இந்தக் கேள்வியை காவல்துறையிடம் கேட்க வேண்டும், என்னிடம் கேட்கக்கூடாது. நான் ட்ரெண்டிங்கில் இருப்பதால் என்னை வைத்து வியாபாரம் செய்ய வேண்டாம்” என திடீரென என ஜெயக்குமார் ஆவேசமாக பேசினார். மேலும் வளர்ச்சியில் அதிமுக ஆட்சியின் போது முதல் மாநிலமாக தமிழகம் இருந்ததாகவும், தற்போது திமுக ஆட்சியில் 17-வது இடத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதிமுக பொற்கால ஆட்சி, திமுக கற்கால ஆட்சி என தெரிவித்தார்.

மேலும் அதிமுக அரசு ஹீரோவாக செயல்பட்டதாகவும், திமுக அரசு ஜீரோவாக உள்ளதாகவும் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். அதிமுக அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் நிறுத்துவதே திராவிட மாடலின் நோக்கம் எனவும் அதிமுக சசிகலாவுடன் இணைவது என்பது எடுபடாத விஷயம், இணைய வாய்ப்பே இல்லை, இணைப்பு குறித்து சசிகலா கூறும் கருத்து கேட்டு புளித்துவிட்டது எனவும் அவர் தெரிவித்தார்.