பேரவை தலைவர் மாண்பை மீறி கட்சிக்காரர் போல பேசி வருகிறார் சபாநாயகள் அப்பாவு என்றும், ஓபிஎஸ் விஷயத்தில் அவரின் பதவியை நீக்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தையை இதுவரை முடிக்காமல் உள்ளதை கண்டித்தும், போக்குவரத்து துறை ஊழியர்களுக்கான அமைக்கப்பட்ட குழுவில் அண்ணா தொழிற்சங்க பேரவை புறக்கணிப்பு செய்துள்ளதை கண்டித்தும், அண்ணா தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கோகுல இந்திரா உள்ளிட்டோர் பங்கு பெற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “திமுகவின் தொழிலாளர்கள் விரோதப் போக்கை கண்டிக்கும் வகையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகுந்த சங்கடங்களுக்கு ஆளாகி உள்ளனர். செவுடன் காதில் சங்கு ஊதுவது போல தொழிலாளர்கள் கோரிக்கையை கண்டும் காணாமல் திமுக உள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்கள் வீதிக்கு வந்து தங்களையே வருத்திக்கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ச்சியாக இதே நிலை ஏற்பட்டால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களை அதிமுக நடத்தும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே வேலை நிறுத்தம் செய்யாமல் உள்ளோம். அப்பாவு சபாநாயகர் வேலையை பார்க்க வேண்டும். கட்சிகாரர் போல பேரவைத் தலைவர் மாண்பை மீறி வருகிறார். கட்டப்பஞ்சாயத்து ராஜாவாக சபாநாயகர் உள்ளார் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் ஆளுநர் விருந்தில் கலந்துகொள்ள வெண்டும் என கட்டாயம் இல்லை. பந்திக்கு முந்தி படைக்கு பிந்தி என ஓபிஎஸ் உள்ளார். அதனால் அவர் சென்றுள்ளார். முடிந்தால் மக்கள் பிரச்சனைக்காக 1000 நபர்கள் கூட்டி போராட்டம் நடத்தி காட்டட்டும். ஓபிஎஸ் தரப்பில் 80% நபர்கள் இல்லை, 80 நபர்கள் மட்டும் தான் உள்ளனர். சசிகலா, தினகரன் இருவரையும் எந்த நிலையிலும் நாங்கள் சேற்றுக்கொள்ள மாட்டோம்.
முதல்வர் - பிரதமர் சந்திப்பில் மாநில வளர்ச்சி குறித்து எதுவும் பேச வாய்ப்பில்லை. மாநில உரிமைகளை காவு கொடுத்து விட்டு, மத்தியில் மண்டியிடும் வேலையை தான் திமுக செய்து வருகிறது. மத்திய ஆட்சியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நிதியை பெற்று தந்தார். ஆனால் இவர்கள் எதுவும் பெற்று தர போவதில்லை.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் பதவியை நீக்கி உத்தரவு அளித்தால் சபாநாயகர் மாண்புமிகு பேரவை தலைவர் என அழைக்கப்படுவார். இல்லை என்றால் மாண்பு இல்லாத ஒருவராக தான் பார்க்க முடியும். பொருளாதார நிபுணர் குழு அமைத்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியுள்ளது. அவர்கள் என்ன அறிக்கை வழங்கினார்கள் என வெளியிட வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.