திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி நெல்லை ரெட்டியார்பட்டி பகுதியில் வசித்து வந்தார். கணவர் முருகு சந்திரன், பணிப்பெண் மாரி ஆகியோருடன் அவர் வீட்டில் இருந்தபோது, திடீரென உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவர்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
உறவினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டும், மோப்ப நாய் உதவியுடனும் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்த நகைகள் மாயமாகி இருப்பதால், நகைகளை கொள்ளையடிப்பதற்காக இந்தப் படுகொலைகள் நடந்ததா? அல்லது சொத்து பிரச்னையா? என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் ஆதாயக் கொலை செய்யப்பட்டிருப்பதாக மாநகர் காவல்துறை ஆணையர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். பாளை குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.