ஆட்டு சந்தை pt desk
தமிழ்நாடு

ரம்ஜான் நெருங்கியபின்னும் ஆடுகள் விற்பனை மந்தம் - களையிழந்த வேப்பூர் ஆட்டு சந்தை... காரணம் என்ன?

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் நிலையில், தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல் வேப்பூர் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை களையிழந்து காணப்படுகிறது.

webteam

செய்தியாளர்: கே.ஆர்.ராஜா

கடலூர் மாவட்டம் வேப்பூர் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தையில் வாரந்தோறும் சுமார் ஒரு கோடிக்கு மேல் விற்பனை நடைபெறும் நிலையில், ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ரூ.5 கோடி வரை ஆடுகள் வியாபாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மக்களவைத் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ள காரணத்தால் தமிழகமெங்கும் தேர்தல் பறக்கும் படையினர் விடிய, விடிய வாகன தணிக்கையில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக / உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

Goat sales slow

ஆடுகளுக்கு விற்பனை ரசீது, ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்ய முடியாததால் ஆடு வியாபாரம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேரடி பணப் பரிமாற்றத்தை மட்டுமே நம்பியுள்ள வியாபாரிகள் பணத்தை எடுத்து வர முடியாமலும், ஆடுகளை வாங்க ஆர்வமில்லாமலும் உள்ளனர். இதனால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கடந்த மூன்று வாரங்களாக ஆட்டுச் சந்தைகளில் இதே நிலையே நீடித்து வருகிறது.

வேப்பூர் வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தையில் வழக்கமாக ரம்ஜான் பண்டிகையின் போது ரூ. 5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்நிலையில், வருகிற 11 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தற்போது ஒரு கோடி ரூபாய் வரை கூட வர்த்தகம் நடைபெறவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.