தமிழ்நாடு

ராஜேந்திர பாலாஜி பாஜகவுக்கு சென்றாலும் நடவடிக்கை எடுப்பது உறுதி : அமைச்சர் நாசர்

ராஜேந்திர பாலாஜி பாஜகவுக்கு சென்றாலும் நடவடிக்கை எடுப்பது உறுதி : அமைச்சர் நாசர்

kaleelrahman

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவுக்கு சென்றாலும் அவர் மீது நடவடிக்கைகள் எடுப்பது உறுதி என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

திருவள்ளூரில் நேரடி கொள்முதல் நிலையத்தை பால்வளத்துறை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு பின்வாங்குவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சுக்கு பதில் அளிக்கையில், கண்ணிருந்தும் குருடனாகவும், காதிருந்தும் செவிடனாக இருப்பவர் எல்.முருகன் என விமர்சனம் செய்தார்.

சாதாரண பாமர மக்களும் திமுக அரசின் திட்டங்களை பாராட்டுவதாகவும், எல்.முருகன் பொறாமை காரணமாக அது போன்ற கருத்தை தெரிவித்துள்ளார் என்றும் அவர் கூறினார். ’’அனைத்து அமைச்சர்கள் மீதும் ஆளுநரிடம் ஊழல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மீது நடவடிக்கை தொடரும். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாஜகவுக்கு சென்றாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது உறுதி’’ என தெரிவித்தார்.

நேரடி கொள்முதல் விவசாயிகளிடம் மூட்டைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 46 நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 62 ஆக உயர்த்தப்படும் என்றார்.