ஈரோடு  புதிய தலைமுறை
தமிழ்நாடு

ஈரோடு | சிறையில் இருந்து பிணையில் வந்த மகன்... மறுநொடியே மீண்டும் கைது; சிறைவாசலில் கதறி அழுத தாய்!

ஈரோட்டில் சிறையில் இருந்து பிணையில் வந்த இளைஞரொருவரை, மறுநொடியே காவல்துறை வேறொரு வழக்கில் மீண்டும் கைது செய்துள்ளது. அப்போது தன் மகனை விட்டுவிடுமாறு இறுக்கக் கட்டிப் பிடித்து தாய் பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: சுப்பிரமணியம்

ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியை சேர்ந்தவர் நரி என்ற மணிகண்டன். இவர் கஞ்சா வைத்திருந்ததாக கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவை மாவட்டம் சரவணம்பட்டி காவல்துறையினர் இவரை கைது செய்தனர்.

தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் சிறையில் 3 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த மணிகண்டன், பிணையில் வெளியே வந்துள்ளார். அவரை அழைத்து செல்ல அவரது தாயார் சுமதி, சிறை வாசலில் காத்திருந்தார்.

இந்தநிலையில், வெளியே வந்த மணிகண்டனை, மறுநொடியே சரவணம்பட்டி தனிப்படை காவல் துறையினர் வேறு ஒரு வழக்கில் கைது செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் சுமதி, மகனை கட்டிப்பிடித்து அழுதார். இருந்தபோதிலும் மணிகண்டனை காவல் துறையினர் காரில் ஏற்றவே, சுமதியுடம் உடன் ஏற முயன்றுள்ளார். அப்போது அவரது காலில் கார் ஏறியதில் காயமடைந்தார்.

இதையடுத்து காயமடைந்த சுமதியை அருகிலிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவர், தனது மகனின் உயிரை காப்பாற்றி தருமாறு முதலமைச்சர் ஸ்டாலினிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். தன் மகன் மீது பொய் வழக்குப்போட்டு காவல்துறையினர் அடிக்கடி கைது செய்து வருவதாகவும் தாயார் சுமதி குற்றம்சாட்டினார்.