ஈரோட்டில் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பாசஞ்சர் ரயில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்டது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது போக்குவரத்தில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுபாடுகளை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதை அடுத்து ஈரோடு சந்திப்பில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து பாசஞ்சர் ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் பாசஞ்சர் ரயில் இயக்கம் குறித்து பரிசீலிக்கப்படவில்லை இதனால் ஈரோட்டில் இருந்து திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களுக்குச் செல்லும் பணியாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாட்ஷா, ரயில்வே நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு சந்திப்பில் இருந்து கோவை ரயில் நிலையம் வரை செல்லும் பாசஞ்சர் ரயிலுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஈரோடு சந்திப்பில் இருந்து புறப்பட்ட ரயிலுக்கு மாலை கட்டி, திருஷ்டி சுத்தி, தேங்காய் உடைத்து ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகளை முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் உள்பட பலர் வழங்கி மகிழ்ந்தனர்.
இந்த ரயிலை தினமும் 2000க்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்துவார்கள் எனவும், இனிவரும் காலங்களில் ஈரோட்டில் இருந்து பாலக்காடு, சேலம், ஜோலார்பேட்டை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பாசஞ்சர் ரயில்களை இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் பாசஞ்சர் ரயில் கட்டணம் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது பயணிகளுக்கு பெரும் பாரத்தை ஏற்படுத்தியுள்ளது இதனை குறைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.