Bomb Threat pt desk
தமிழ்நாடு

ஈரோடு: தனியார் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் - நிபுணர்கள் தீவிர சோதனை

ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

webteam

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் அருகே தனியார் (ஜேசீஸ்) பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் இன்று அது வெடிக்கும் என்றும் மர்ம நபர்கள் கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்களில் இமெயில் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பள்ளி நிர்வாகம் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Bomb Threat

இதைத் தொடர்ந்து இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை வீட்டிற்கு திருப்பி அனுப்பிய நிலையில், பள்ளிக்கு விடுமுறை அளித்தனர். மேலும் பள்ளியின் சார்பில் பெற்றோர்களுக்கு தங்களின் குழந்தைகளை அழைத்துச் செல்லுமாறு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பள்ளிக்கு வரும் அனைத்து பாதைகளையும் தடுப்புகள் மூலம் அடைத்து பள்ளியை காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், ஏடிஎஸ்பி விவேகானந்தன் தலைமையிலான காவல்துறையினர் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வெள்ளியன்று ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் மெயில் வந்தது. பிறகு அவை புரளி என்பது தெரியவந்தது.