தமிழ்நாடு

ஈரோடு இடைத்தேர்தல்: அடுத்தடுத்து மாற்றப்பட்ட அதிமுக பேனர் - காரணம் என்ன?

ஈரோடு இடைத்தேர்தல்: அடுத்தடுத்து மாற்றப்பட்ட அதிமுக பேனர் - காரணம் என்ன?

webteam

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், அதிமுக இபிஎஸ் அணி தேர்தல் பணிமனையில் இருந்த பேனர் இரண்டாவது முறையாக மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிமனைகளை அமைத்து தீவர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே இபிஎஸ் அணி சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுடன் செங்கோட்டையன் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கும் போதே அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டார். இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த பேனரில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மாலையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற வாசகத்தின் மீது தேசிய ஜனநாயக கூட்டணி என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

இச்சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பழைய பேனருக்கு பதில் புதிதாக பேனரை வைத்துள்ளனர். இந்நிலையில், தற்போது வைக்கப்பட்டுள்ள பேனரில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வெற்றி வேட்பாளர் என்ற வாசகத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது. புறாவிற்கு போரா என்பதை போல பேனருக்கு இத்தனை போராட்டமா என அதிமுக தொண்டர்கள் பேசிக் கொண்டனர்.