தமிழ்நாடு

புதுக்கோட்டை தீண்டாமை விவகாரம்: சர்ச்சைக்கு உள்ளான கோயிலில் சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு

புதுக்கோட்டை தீண்டாமை விவகாரம்: சர்ச்சைக்கு உள்ளான கோயிலில் சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு

webteam

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முத்துக்காடு ஊராட்சி இறையூர் கிராமம் வேங்கைவயல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் மனிதக்கழிவை கலந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இதனை அடுத்து வருவாய் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி இச்சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வந்தனர். மேலும் இந்த மனிதக் கழிவு கலந்த குடிநீரை குறித்த ஆறு சிறுவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் இதில் ஒரு சிறுமி மட்டும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த 27ம் தேதி இறையூர் கிராமத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே ஆகியோர் அப்பகுதி பொதுமக்களிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்டு மக்களுக்கு தேவையான மருத்துவ முகாம் ஏற்படுத்திக் கொடுத்து அவர்களது கோரிக்கைகளையும் கேட்டு அறிந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள அய்யனார் கோயிலில் பல தலைமுறைகளாக கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்ய பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், அதேபோல் அந்த பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடையில் இரட்டை குவளை முறை பின்பற்றப்படுவதாகவும் புகார் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பட்டியல் இன மக்களை சம்பந்தப்பட்ட கோவிலுக்குள் அழைத்துச் சென்று வழிபாடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். இது பல தரப்பு மக்களிடையே வரவேற்பு பெற்றது. மேலும் அப்பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு சென்ற ஆட்சியர் அந்த தேநீர் கடையில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு இரட்டை குவளைகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக டீக்கடை நடத்தி வந்த கணவன் மனைவி இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கவும், அதேபோல் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அழைத்துச் செல்லும் பொழுது அவர்களை இழிவாக பேசிய மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார். அதன்படி மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் நான்கு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அதில் சிங்கம்மாள் மற்றும் தேநீர் கடை நடத்தும் மூக்கையா உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட இறையூர் வேங்கைவயல் பகுதியில் உள்ள மக்களிடம் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவும் அவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கருதி நேற்று முன்தினம் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் சமரச கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிகாரிகளும் அந்த கிராமத்தைச் சேர்ந்த மூன்று சமுதாய மக்களும் கலந்து கொண்டு அதில் முக்கிய முடிவுகளை எடுத்தனர்.

குறிப்பாக பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலந்தவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும், தேநீர் கடையில் இரட்டை குவளை முறை பின்பற்றப்பட்டு இருந்தால் இனி அவ்வாறு செயல்படக் கூடாது, அதேபோல் அந்த பகுதியில் உள்ள அய்யனார் கோயிலில் மூன்று சமுதாய மக்களும் ஒன்றிணைந்து வழிபாடு நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு இதில் மூன்று சமுதாய மக்களும் ஒப்புதல் தெரிவித்து கையொப்பமிட்டனர்.

இதனையடுத்து நேற்று சம்பந்தப்பட்ட இறையூர் அய்யனார் கோயிலில் மூன்று சமுதாய மக்களும் ஒன்றிணைந்து வழிபாடு நடத்தும் `சமத்துவ பொங்கல் விழா’ மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

கோயில் நுழைவு வாயிலில் வாழை மர தோரணங்களும் அதேபோல் மேளதாளங்கள் முழங்க காலை முதல் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டது. பின்னர் பட்டியலின மக்களை வருவாய்த்துறையினரும் ஆதி திராவிட நலத்துறை அதிகாரிகளும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக தட்டு தாம்பூலத்துடன் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மூன்று சமுதாய மக்களும் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.

இதில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் காவல் துறையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும் இதில் கலந்துகொண்ட அமைச்சர் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் இதில் கலந்துகொண்டு வழிபட்ட பட்டியலின மக்கள் கூறுகையில், “பல தலைமுறைகளாக கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த தலைமுறையினர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்த சம்பவம் இன்றுடன் முடிந்து விடாமல் பட்டியலின மக்களுக்கு இது நிலைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதேபோல் எந்தப் பகுதியில் இருந்தாலும் அதற்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நாங்கள் அருந்தும் குடிநீரில் மனித கழிவை கலந்து கொடூர செயலில் ஈடுபட்ட நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், “திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இறையூர் கிராமத்தில் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக இணைந்து கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்கு சமரசக் கூட்டம் நடத்தி தீர்வை ஏற்படுத்தி அனைத்து மக்களையும் ஒன்றிணைத்த மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி.

நடைபெறக் கூடாத மனிதாபிமானமற்ற கண்டிக்க கூடிய வகையில் நடைபெற்ற செயலை யார் செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையினர் அந்த நடவடிக்கையை மேற்கொள்வார்கள். குற்றவாளியை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மலம் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டிக்கு பதிலாக இன்னும் இரு தினங்களில் அந்த பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு 20 தினங்களில் பணி முடிக்கப்பட்டு மீண்டும் அப்பகுதி மக்களுக்கு புதிய குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுபோன்ற மற்றொரு சம்பவம் அரங்கேறாமல் இருக்க மனிதர்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனும் மனிதாபிமான அடிப்படையில் மற்றவர்களை மதிக்க கூடிய வகையில் மாறினால் இது போன்ற நிகழ்வு எப்போதும் அரங்கேறாது. பொதுவாகவே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில், தயவு தாட்சனையின்றி யார் தவறு செய்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் தான் இதிலும்! யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த பணியை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்” என்று தெரிவித்தார் ‌

இது குறித்து கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சின்னத்துரை கூறுகையில், “இறையூர் கிராமத்தில் நடைபெற்ற இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாச்சனையின்றி கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் அரங்கேறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்று வழிபாடு செய்ய நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் அதே போல் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனுக்கும் மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்தார்.

சுப.முத்துப்பழம்பதி