மா.சுப்பிரமணியன் PT
தமிழ்நாடு

மருந்து தட்டுப்பாடு குற்றச்சாட்டு: இபிஎஸ் Vs மா. சுப்பிரமணியன்

“தமிழ்நாட்டில் மருந்து பற்றாக்குறை என கூறும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அது தொடர்பாக விவாதத்திற்கு வர தயாரா?” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

PT WEB

மக்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களை உடனே வழங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று வலியுறுத்தி, அது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதில் கொடுக்கும் விதமாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

மா.சுப்பிரமணியன்

திருவள்ளூர் மாவட்டத்தில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “தமிழ்நாட்டில் 313 வகையிலான அத்தியாவசிய மருந்துகள், 234 வகையிலான மருத்துவ அறுவை மற்றும் தையல் உபகரணங்கள், 326 சிறப்பு மருந்துகள், 7 ரத்தம் உறைதல் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பூச்சி கொல்லி மருந்துகள் அனுப்பப்பட்டு வருகிறது.

மருத்துவமனைகளுக்கு வினியோகம் செய்யப்பட்ட பிறகு 240.99 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள் தற்போது கிடங்குகளில் கையிருப்பில் உள்ளன. 32 மாவட்டங்களில் மருந்து கிடங்குகள் உள்ள நிலையில் எஞ்சிய 6 மாவட்டங்களிலும் தலா 5 கோடி என ரூ30 கோடி மதிப்பீட்டில் மருந்து கிடங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மருத்துவத்துறைக்கு ஒன்றிய அரசு சார்பில் கடந்த 10 ஆண்டுகளில் 549 விருதுகள் மட்டுமே கிடைத்த நிலையில் தற்போது ஒரே ஆண்டில் மட்டும் 310 விருதுகள் பெற்றுள்ளது. கடந்த 6ஆண்டுகளில் மகப்பேறு பிரிவிற்கு 79 விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் அதில் கடந்த ஓராண்டில் மட்டுமே 45 விருதுகள் கிடைத்துள்ளன.

மருந்துகள் பற்றாக்குறை என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். அறிக்கை வெளியிட்டு அதன் பின் ஒளிந்து கொள்வது எதிர்க்கட்சி தலைவருக்கு பொருத்தமானது அல்ல. எனவே எங்கு பற்றாக்குறை என என்னுடன் நேரில் வந்து சுட்டிக்காட்டுங்கள். சந்தேகத்திற்கு மிக நெருக்கமானவர் எடப்பாடி பழனிசாமி. எனவே மருத்துவத்துறை தொடர்பாக மேலும் சந்தேகங்கள் இருந்தால் எடப்பாடி பழனிசாமியோ அல்லது அவர் அனுப்பும் நபரோ என்னிடம் வரலாம். நான் அவர்களுடன் விவாதம் நடத்த தயார்” என்று பேசியுள்ளார்.

இபிஎஸ்

முன்னதாக நேற்றைய தினம் மக்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களை உடனே வழங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில்,

“சென்னை மாநகராட்சி ஆணையரின் உதவியாளருக்கே அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.
 உயர் அதிகாரிகளுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், “அம்மா கிளினிக்குகளை மூடிவிட்டு, நகர்ப்புற மருந்தகங்கள் என பெயர் மாற்றி 700 மருந்தகங்களை மட்டுமே தொடங்கியுள்ளது. கிராமப் புறங்களில் உள்ளவர்கள் சளி, காய்ச்சலுக்குக் கூட நகரங்களைநோக்கி அலையவிட்டதுதான் தமிழக அரசின் சாதனை.

எனவே, கிராமப்புறங்களிலும் அரசு கிளினிக்குகளை உடனடியாக திறக்க வேண்டும். மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகளை வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.