EPS pt desk
தமிழ்நாடு

“கள்ளச்சாராய மரணங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகணும்” – இபிஎஸ் வலியுறுத்தல்!

webteam

திருச்சி மற்றும் தஞ்சையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். அவரை அதிமுக திருச்சி மாவட்ட செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், காமராஜ், சிவபதி ஆகியோர் வரவேற்றனர்.

cm stalin

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்தும், செங்கல்பட்டில் போலி மதுபானம் குடித்தும் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர் கெட்டுள்ளது. திறமையற்ற ஒரு பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆள்வதால்தான் இப்படிப்பட்ட கொடுமையெல்லாம் நடக்கிறது.

Minister Senthil Balaji

தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருகி உள்ளது என்று சட்டசபையில் நடைபெற்ற காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் நான் பேசியுள்ளேன். தமிழக டிஜிபி கஞ்சா விற்பனை தடுக்க 2.O, 4.O என்று 'ஓ' போடுவதை மட்டும் தான் செய்கிறார். காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதில்லை. முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் தலையீடு காரணமாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

அவர் பதவியேற்ற நாளிலிருந்து தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, திருட்டு, கஞ்சா விற்பனை, கள்ளச் சாராயம் விற்பனை என்று எல்லா குற்றச் சம்பவங்களும் அமோகமாக நடைபெற்று வருகிறது. மரக்காணத்தில் கள்ளச் சாராயம் விற்பனை நடைபெறுவதாக பத்திரிகையில் வந்த செய்திகளை அரசு கண்டுகொள்ளவில்லை.

மரக்காணம் கள்ளச்சாராயம், செங்கல்பட்டு போலி மதுபான மரணங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று, தமிழகத்தை ஆளும் முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதேபோல இத்துறையை நிர்வகிக்கும் செந்தில் பாலாஜியும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.