தமிழ்நாடு

வேகம் காட்டும் இபிஎஸ் - பொதுக்குழு தீர்மானம் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்

வேகம் காட்டும் இபிஎஸ் - பொதுக்குழு தீர்மானம் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்

சங்கீதா

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வான தீர்மானமும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டதும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒருமாத காலமாக ஒற்றைத் தலைமை விவகாரம் நீடித்து வந்தநிலையில், அதிமுக-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், இதுதொடர்பான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, வளர்மதி உள்ளிட்டோர் தீர்மானத்தை முன்மொழிய, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் வழிமொழிவதாக அக்கட்சியின் ஆர்.பி.உதயகுமார் தீர்மானம் வாசித்தார்.

இதைத்தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, மலர்தூவி மரியாதை செலுத்தினார். எம்.ஜி.ஆர், அண்ணா நினைவிடங்களுக்கும் சென்று மரியாதை செலுத்திய அவர், முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொண்டர்களையும் சந்தித்தார்.

இதற்கிடையே அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட தீர்மானம் மற்றும் பொதுகுழுவில் கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்துள்ளது. இதேபோல், அ.தி.மு.க. பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிப்பட்டிருப்பதையும் முறைப்படி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்ட்டுள்ளது. பொறுப்பாளர்கள் மாற்றம், விதிகளை திருத்தம் செய்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்துள்ளது.