எடப்பாடி பழனிசாமி  PT WEB
தமிழ்நாடு

“காவல்துறை அதிகாரிகளை மாற்றிவிட்டால் சட்டம் ஒழுங்கு சீராகி விடாது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

webteam

செய்தியாளர்: தங்கராஜூ

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்... “ஓபிஎஸ் எங்களிடம் இருந்து விலக்கப்பட்டு விட்டார். இனிமேல் அவரைப் பற்றி பேச ஒன்றும் இல்லை. தமிழகத்தில் ஐஜியை மாற்றுவதால் சட்டம் ஒழுங்கு சரியாக மாறிவிடாது. நிர்வாகம் சரியாக இருக்க வேண்டும். காவல்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் திறமையாக செயல்பட்டிருந்தால் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட்டிருக்கும்.

cm stalin

ஆனால், பொம்மை முதலமைச்சராக இருப்பதால், காவல்துறை அதிகாரிகளுக்கு உரிய அதிகாரம் இருப்பதில்லை. இதனால், காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அதனால்தான் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு நிகழ்கிறது. கொலை நடைபெறாத நாளே இல்லை. இன்றைக்கு பொதுமக்கள், பெண்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை.

கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் தாராளமாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விற்பனையாகி வருகின்றன. தேசிய கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலையை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. சமூகத்தில் பிரபலமான நபர், தேசியக் கட்சியின் மாநில தலைவரை திட்டமிட்டு கொலை செய்யும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்

தற்போது சரணடைந்தவர்கள் போலி குற்றவாளிகள் என அவரது குடும்பத்தினர் கருதுகின்றனர். அவர்களின் சந்தேகங்களை போக்குவது தமிழக அரசின் கடமையாகும். ஒரு திறமையற்ற முதலமைச்சர் ஆண்டு கொண்டிருப்பதால் எந்த துறையும் வளர்ச்சியின்றி உள்ளது. ஆங்காங்கே ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாமல் உள்ளனர். அதிமுக ஆட்சியில் சேலம் மாநகரம் வளர்ந்து வரும் நகரம் என்பதால் பாலங்கள் அமைக்கப்பட்டு உடனுக்குடன் திறக்கப்பட்டுள்ளது. அணைமேடு கட்டி முடிக்கப்பட்டும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் வேண்டும் என்றே தாமதப்படுத்தி வருகிறார்கள்.

கோவை, நெல்லை மேயர்கள் ராஜினாமா உட்கட்சி சண்டை, பாகம் பிரிப்பது போன்ற சண்டையால் தான் ராஜினாமா என கருதுகிறேன். காஞ்சிபுரத்தில்கூட இதுபோன்ற நிலைதான் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி படுபாதாளத்தில் போய் விட்டது. அடிப்படை வசதிகள் கூட செய்யப்பட வில்லை.

இபிஎஸ்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் வேண்டும் என்றே திட்டமிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் திமுக அரசு சிவில் வழக்கில் கிரிமினல் வழக்குப்போல வதந்தியை பரப்புகிறார்கள். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட வழக்கு போட்டுள்ளனர். அதை சட்டப்படி முறியடிப்போம்” என்று தெரிவித்தார்.