அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்.-ரின் 35ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சமாதியில் அஞ்சலி செலுத்திய இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
முன்னாள் அமைச்சரும், செய்தி தொடர்பாளருமான வைகைச் செல்வன் உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். அதில், “கொடி பிடித்த தொண்டனை ஆள வைத்தது அதிமுக. தொண்டனை துச்சமென நினைத்து மகனுக்கு மகுடம் சூட்டியது! திமுக-வை வீட்டிற்கு அனுப்புவோம். விடியா ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். ஸ்டாலினின் பொய் முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்” உள்ளிட்ட உறுதிமொழிகளை அனைவரும் ஏற்றனர்.
மேலும் நீட் விலக்கு, கல்விக் கடன் ரத்து, மகளிருக்கு 1000 ரூபாய், பொங்கல் தொகுப்பு 5000 ரூபாய் போன்ற அறிவிப்புகளும், மக்கள் கேள்விகளுக்கும் பதில் எங்கே, எங்கே என்றும் குரல் எழுப்பினர். திமுக-வை வீழ்த்திய எம்.ஜி.ஆர். வழியில் மீண்டும் திமுகவை வீழ்த்துவோம் எனச் சூளுரைத்த அதிமுகவினர், பின்னர் எம்.ஜி.ஆருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடையே பேசினார். அவர் பேசுகையில், “அதிமுக-வை ஒருங்கிணைக்க சசிகலா யார்? எங்கள் தலைமையான கூட்டணியில் நாங்கள் ஒதுக்குகின்ற இடம்தான். எங்கள் தலைமையில்தான் 2024 கூட்டணி அமையும். டிடிவி, சசிகலா சேர்ந்து வந்தாலும் தனியாக வந்தாலும் சேர்க்க மாட்டோம்.
பொங்கல் பரிசுத் தொகையை 5000 ரூபாயா ஆகக் கொடுக்க முடியும் என்று திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது சொன்னார்கள். இப்பொழுது ஏன் அவர்கள் கொடுக்கவில்லை? திட்டத்தின் மூலம் மக்கள் பலன் பெறுவதை அறிவதே தலைவனின் பொறுப்பு” என்றார்.
மேலும் பேசுகையில், “ஜெயலலிதா மரணத்திற்குக் காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். ஜெயலலிதாவின் ஆத்மா அவர்களை சும்மா விடாது” என்றும் குறிப்பிட்டார்.