edappadi palanisamy ptweb
தமிழ்நாடு

“மோடி என்னிடம் மட்டும் நெருக்கமாக உள்ளாரா?” - டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Angeshwar G

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பின், அதாவது பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை அமைந்த பின் கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி எந்த அளவிற்கு உள்ளது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இளைஞர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து செயல்படக்கூடிய அரசாக மத்திய அரசு இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளும் அதற்கு துணை நிற்கின்றன. இந்தியா முழுவதும் வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்று பெறும்.

சிறிய கட்சி, பெரிய கட்சி என்றெல்லாம் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உரிய மரியாதை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன. அவற்றில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசுதான். மற்றவையெல்லாம் பல்வேறு வகையில் கால சூழ்நிலைகளால் கலைக்கப்பட்டவை. எனவே திமுகவிற்கு எங்களைப் பற்றி பேச அருகதை இல்லை.

காங்கிரஸ் ஆட்சி மத்தியில் இருந்த போது அதில் திமுக அங்கம் வகித்தது. அப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக எம்.பி. கனிமொழி கைது செய்யப்பட்டார். அவர்களுக்கு எங்களைப் பற்றி பேச தகுதி இல்லை.

நேற்று ஸ்டாலின் பங்கு பெற்ற பல்வேறு கட்சிகளின் கூட்டத்திற்கு யாரெல்லாம் வந்திருந்தனர் என பார்த்தீர்களே... ஸ்டாலினிற்கு வரவேற்பு கொடுத்த கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. அந்த அணியில் இடம் பெற்ற பல தலைவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இல்லையென்றெல்லாம் சொல்ல முடியாது.

eps pm modi

தமிழகத்திலும் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடந்து வருகிறது. இப்படி இருக்கும் போது அவர்களுக்கு எங்களைப் பற்றி பேச அருகதை இல்லை. மோடி என்னுடன் மட்டும் நெருக்கமாக இல்லை. அனைவரிடமும் நெருக்கமாக தான் உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் மரியாதை அளிப்போம் என பிரதமரே கூறியுள்ளார்” என்றார்.