EPS pt desk
தமிழ்நாடு

மக்களவை தேர்தல் தோல்வி எதிரொலி: நாளை எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை?

webteam

செய்தியாளர்: மோகன்ராஜ்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள், தாங்கள் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. புதுச்சேரி உட்பட எட்டு தொகுதிகளில் அக்கட்சி டெபாசிட்டும் இழந்தது. இது கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மட்டுமன்றி அதிமுக தான் போட்டியிட்ட 32 தொகுதிகளில் ஒன்பது இடங்களில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

EPS

குறிப்பாக தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தொகுதிகளில் தோல்வி அடைந்தது. இதனால் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் பல்வேறு தரப்பினர் பல விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இருப்பினும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுவரை மௌனமாக இருக்கிறார்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நாளை எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஒரு சில தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்கள் நெடுஞ்சாலை நகர் இல்லத்திற்கு வந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தோல்விக்கான காரணங்கள் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.

eps

சொந்த மாவட்டமான சேலத்திலும் அதிமுக வேட்பாளர் தோல்வி அடைந்திருக்கின்றனர். கட்டாயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையில் இருந்த கள்ளக்குறிச்சி தொகுதியையும் அதிமுக இழந்தது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மட்டும் 45 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றது. மீதமுள்ள ஐந்து தொகுதிகளிலும் அதிமுக பின்னடைவை சந்தித்தது.

குறிப்பாக கள்ளக்குறிச்சி தொகுதியில் பெரும் நம்பிக்கையாக இருந்த ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய மூன்று தொகுதிகளிலும் அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக பாஜக இடையே கருத்து மோதல்கள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில், சேலத்தில் நாளை நடைபெறும் அதிமுக ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மௌனம் கலைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.