தமிழ்நாடு

இபிஎஸ் தூர்வாரியது கண்மாயா? கஜானாவா? எனத் தெரியவில்லை: அமைச்சர் பெரியகருப்பன்

இபிஎஸ் தூர்வாரியது கண்மாயா? கஜானாவா? எனத் தெரியவில்லை: அமைச்சர் பெரியகருப்பன்

kaleelrahman

எடப்பாடி பழனிசாமி கண்மாயை தூர்வாரினாரா? அல்லது கஜானாவை தூர்வாரினாரா? எனத் தெரியவில்லை என அமைச்சர் பெரியகருப்பன் பேட்டியளித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் இல்லத் திருமண விழாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் “கடந்த அதிமுக அரசு கஜானாவை காலி செய்து விட்டார்கள். வேலையில் இருந்த பலரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். காலி பணியிடங்களையும் நிரப்பாமல் சென்று விட்டனர். தமிழகத்தில் 6 லட்சம் கோடி ரூபாய் கடனை அதிமுக அரசு வாங்கி வைத்துள்ளனர். இதையெல்லாம் சமாளித்து தமிழக முதல்வர் தன்னுடைய மதிநுட்பத்தால் செயல்பட்டு தமிழக அரசை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்” என்றார். 

அதிமுக ஆட்சியில் கண்மாய்கள் தூர்வாரியதால் தான் தற்போது கண்மாய்கள் நிரம்பி உள்ளன என எடப்பாடி பழனிச்சாமி கூறி வருவதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் “அவர் கண்மாயை தூர்வாரினாரா? அல்லது கஜானாவை தூர் வாரினாரா? எனத் தெரியவில்லை. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நல்லாட்சிக்கு சான்றாக திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் 100 சதவீத வெற்றியை தமிழக முதல்வர் தலைமையிலான கூட்டணி நிச்சயமாக வெற்றி பெரும்” எனத் தெரிவித்தார்.