eps vs annamalai file image
தமிழ்நாடு

எடப்பாடி போட்ட மாஸ்டர் பிளான்.. இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு?

பாஜகவுடனான கூட்டணி குறித்து அதிமுக தலைமை இன்று முக்கிய முடிவை எடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா குறித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதோடு, அவரது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அதிமுக தலைவர்கள் கூறிவந்தனர். இதனை நிராகரித்த அண்ணாமலை, எனது கருத்து சரிதான், மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று கூறியிருந்தார்.

அண்ணா

இது தொடர்பாக பாஜக - அதிமுக இடையேயான வார்த்தை மோதல் கடந்த சில தினங்களாக வலுவான நிலையில், அண்ணாமலையின் பேச்சுக்கு ஜெயக்குமார், வேலுமணி போன்ற தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு ஒரு படி மேலாக, அதிமுக கூட்டணியில் தற்போதைக்கு பாஜக இல்லை என்றும் அறிவித்திருந்தார் ஜெயக்குமார்.

இதனால் இரு தரப்பு தொண்டர்களும் உற்சாகத்தை வெளிப்படுத்திய நிகழ்வுகளும் ஆங்காங்கே நடந்தேறின. தொடர்ந்து, சமீபத்தில் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவை சந்தித்து பேசிவிட்டு திரும்பியிருந்த அதிமுக தலைவர்கள் குழு, இபிஎஸ்ஸையும் சந்தித்து பேசி இருந்தது.

இந்நிலையில், சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. பிற்பகல் 3.45 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணியை தொடரலாமா? அல்லது கூட்டணியை முறித்துக்கொள்ளலாமா என்று மாவட்டச் செயலாளர்களிடம் கருத்துக்களை இபிஎஸ் கேட்டறிந்ததாகவும் தெரிகிறது. இதனால், யாருடன் கூட்டணி, யாருடன் கூட்டணி இல்லை என்ற முக்கிய முடிவு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.