எடப்பாடி பழனிசாமி கோப்புப்படம்
தமிழ்நாடு

“அதை நான் பார்த்துக்கொள்கிறேன்” ஒரே வரியில் முடிவை சொன்ன இபிஎஸ்; மா.செ கூட்டத்தில் நடந்ததென்ன?

Angeshwar G

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கும் இந்த கூட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி அனைத்து கட்சிகளும் முதற்கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளன. அதிமுகவும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என இருமுறை அழுத்தம் திருத்தமாக அறிவித்துள்ளது. அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்தான் ஓரிரு தினங்களுக்கு முன் எஸ்டிபிஐ கட்சியின் மாநாட்டிலும் சிறப்பு விருந்தினராக எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். தொடர்ந்து இன்று மக்களவை தேர்தல் குறித்து வியூகம் அமைப்பதற்காக நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து அதுதொடர்பான தகவல்களை சேகரித்து தயாராக வைத்திருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். கூட்டணி இறுதியான பின் எந்தெந்த தொகுதிகளுக்கு எந்தெந்த வேட்பாளர்களை இறுதி செய்வது என்பது குறித்து முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 5 மணி வரை அனைத்து மாவட்ட செயலாளர்களும் சென்னையில் இருக்கும்படியும் யாரும் செல்ல வேண்டாம் என்றும் எடப்பாடி பழனிசாமியால் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதி குறித்தும் அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் தனித்தனியாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.